ஷாரூக்கானா யார் அவர்?.. செய்தியாளர்களுக்கு ஷாக் கொடுத்த அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா

 
ஷாரூக்கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானின் நடிப்பில் வெளியாகியுள்ள பதான் திரைப்படம் தொடர்பான  பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஷாரூக்கானா யார் அவர் என்று அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கேட்டார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்த பதான் திரைப்படம் இம்மாதம் 25ம் தேதி வெளியாகிறது. அண்மையில் இந்த படத்தில் இருந்து பேஷாரம் ரங் என்ற பாடல் வெளியானது. அந்த பாடலில் படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனை காவி நிற பிகினி அணிந்து மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல அமைப்புகளின் தலைவர் இந்த படத்தை தடை செய்ய  வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பதான்

இந்த சூழ்நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள நரேங்கி நகரில் ஒரு திரையரங்கில் பதான் திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்காக அந்த திரையரங்கில் பதான் பட விளம்பர போஸ்டர்கள் வைக்கப்பட்டு இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த திரையரங்குக்கு சென்ற பஜ்ரங் தளம் அமைப்பினர் அங்கு போஸ்டர்களை கிழித்து, எரித்து வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவிடம் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

ஹிமாந்தா பிஸ்வா சர்மா

அதற்கு ஹிமாந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் பதிலளிக்கையில், ஷாரூக்கான் யார்? அவரை பற்றியோ, பதான் படத்தை பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. கான் என்னிடம் பேசவில்லை, பாலிவுட்டில் இருந்து பலர் இந்த பிரச்சினையை பற்றி பேசினாலும், அவர் பேசினால், நான் விஷயத்தை பார்ப்பேன். சட்டம் ஒழுங்கை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து ஷாரூக்கான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று செய்தியாளர்கள் தெரிவித்தனர். உடனே ஹிமாந்தா பிஸ்வா சர்மா, மாநில மக்கள் அசாமிய திரைப்படங்களை பற்றி கவலைப்பட வேண்டும், இந்தி படங்களை பற்றி அல்ல. மறைந்த நிபோன் கோஸ்வாமியின் டாக்டர் பெஸ்பருவா-2 படம் விரைவில் வெளியாகும். மக்கள் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.