வெளிநாட்டில் முஸ்லிம் தலைவர்களை கட்டிப்பிடிக்கும் மோடி சொந்த நாட்டில் ஒரு முஸ்லிமையும் ஏன் கட்டிப்பிடிப்பது இல்லை?.. ஓவைசி

 
தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?.. உத்தர பிரதேச அரசை சாடிய அசாதுதீன் ஓவைசி

பிரதமர் மோடி ஏன் மற்ற நாடுகளின் அனைத்து முஸ்லிம் தலைவர்களையும் கட்டிப்பிடிக்கிறார். ஆனால் தனது சொந்த நாட்டில் ஒரு முஸ்லிமையும் கட்டிப்பிடிப்பதைப் பார்க்கவில்லை? என்று அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பினார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாங்கள் உயர்ந்த இனத்தை சேர்ந்தவர்கள், இந்த நிலத்தை ஒரு முறை ஆண்டோம், மீண்டும் ஆட்சி செய்வோம், எங்கள் பாதை மட்டுமே சரியானது, மற்ற அனைவரது பாதைகளின் தவறு, நாங்கள்  வேறுபட்டவர்கள், எனவே நாங்கள்  தொடர்ந்து இருப்போம், நாம் (இந்து-முஸ்லிம்)  ஒன்றாக வாழ முடியாது என்ற இந்த கதையை அவர்கள் (முஸ்லிம்கள்) கைவிட வேண்டும். எளிமையான உண்மை என்னவென்றால், இந்த இந்துஸ்தான், இந்துஸ்தானாகவே இருக்க வேண்டும். இன்று பாரதத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, இஸ்லாம் பயப்பட ஒன்றுமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மோகன் பகவத்

இந்துஸ்தான், இந்துஸ்தானாகவே இருக்க வேண்டும் என்ற மோகன் பகவத்தின் கருத்தை ஹைதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: இந்தியாவில் வாழ அல்லது நமது நம்பிக்கையை பின்பற்றுவதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி கொடுப்பதற்கு மோகன் பகவத் யார்?. அல்லாஹ் நாடியதால் நாம இந்தியர்கள். நமது குடியுரிமைக்கு நிபந்தனைகள் போட அவருக்கு எவ்வளவு தைரியம்?.

சவுதி இளவரசரை கட்டிபிடித்த பிரதமர் மோடி

நாக்பூரில் உள்ள பிரம்மச்சாரிகள் என்று கூறப்படும் ஒரு கூட்டத்திற்கு நம் நம்பிக்கையை சரி செய்ய நாம் இங்கு இல்லை. ஆர்.எஸ்.எஸ். மேலாதிக்கத்தின் கொந்தளிப்பான சொல்லாட்சியை உணரும் அளவுக்கு இந்துக்கள் உள்ளனர், ஒவ்வொரு சிறுபான்மையினரும் எப்படி உணர்கிறார்கள் என்பதை விட்டு விடுங்கள். சொந்த நாட்டிலேயே பிரிவினைகளை உருவாக்குவதில் மும்முரமாக இருந்தால் வசுதைவ குடும்பகம் என்று உலகுக்கு சொல்ல முடியாது. பிரதமர் மோடி ஏன் மற்ற நாடுகளின் அனைத்து முஸ்லிம் தலைவர்களையும் கட்டிப்பிடிக்கிறார். ஆனால் தனது சொந்த நாட்டில் ஒரு முஸ்லிமையும் கட்டிப்பிடிப்பதைப் பார்க்கவில்லை?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.