காலம் மிகவும் சக்தி வாய்ந்தது, நாளை நமது துணைநிலை கவர்னர் உடன் நாம் மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடும்.. கெஜ்ரிவால்

 
டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கு  இலவச பயணம்….. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

காலம் மிகவும் சக்தி வாய்ந்தது, நாளை நமது துணைநிலை கவர்னர் உடன் நாம் மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடும் என்று டெல்லி சட்டப்பேரவையில் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.


டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. தனது தலைமையிலான அரசின் பணிகளில் துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா தலையிடுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு அண்மையில், டெல்லி அரசு பள்ளி ஆசிரியர்களை பின்லாந்துக்கு பயிற்சிக்கு அனுப்பும் திட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு அனுப்பியது. ஆனால் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் டெல்லி ஆட்சியில் செயல்பாட்டில் துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தலையிடுவதாக குற்றம்சாட்டி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் தேசிய தலைநகரில் உள்ள துணைநிலை கவர்னர் அலுவலகத்திற்கு பேரணி நடத்தினர்.

வினய் குமார் சக்சேனா

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று டெல்லி சட்டப்பேரவையில், பா.ஜ.க.வையும், துணைநிலை கவர்னரையும் கடுமையாக தாக்கி பேசினார். சட்டப்பேரவையில் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றுகையில் கூறியதாவது: காலம் மிகவும் சக்தி வாய்ந்தது. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. நிரந்திரமாக ஆட்சியில் இருப்பேன் என்று நினைத்தால் அது நடக்காது. இன்று நாங்கள் டெல்லியில் ஆட்சியில் இருக்கிறோம். அவர்கள் (பா.ஜ.க.) மத்தியில், நாளை நமது துணைநிலை கவர்னர் உடன் நாம் மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடும். நாங்கள் யாரையும் துன்புறுத்த மாட்டோம். துணைநிலை கவர்னர் யார், அவர் எங்கே இருந்து வந்தார்? அவர் நமது தலையில் அமர்ந்து இருக்கிறார். நம் பிள்ளைகளை எங்க படிக்க வைக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்வாரா? நிலப்பிரபுத்துவ மனப்பான்மை உள்ளவர்களால்தான் நம் நாடு பின்தங்கி கிடக்கிறது. 

பா.ஜ.க.

துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா, ஆசிரியர்களை பின்லாந்துக்கு பயிற்சிக்கு அனுப்பும் திட்டங்களுக்கு இரண்டு முறை எதிர்ப்பு தெரிவித்தார். இது அவரது எண்ணம் நல்லதல்ல என்பதை காட்டுகிறது. ஆசிரியர்கள் பின்லாந்து செல்வதை அவர்கள் (பா.ஜ.க.) விரும்பவில்லை. பா.ஜ.க.வின் பல எம்.பி.க்கள் மற்றும் அவர்களது குழந்தைகளும் வெளிநாடுகளில் படித்துள்ளனர். ஏழைகளின் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் நாம் விரும்பினால், அவர்கள் யார் தடுப்பதற்கு?. துணை நிலை கவர்னர் நிலப்பிரபத்துவ மனப்பான்மையால் அவதிப்படுகிறார், டெல்லியில் உள்ள ஏழைக் குழந்தைகள் நல்ல கல்வி பெறுவதை அவர் விரும்பவில்லை. துணைநிலை கவர்னர் என் தலைமை ஆசிரியர் அல்ல. மக்கள் என்னை டெல்லி முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர். துணைநிலை கவர்னர் எனது கோப்புகளை ஆராய்கிறார் எனது ஆசிரியர்கள் கூட எனது வீட்டுப்பாடத்தை சரிபார்க்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.