போலி செய்திகளை பரப்பிய 94 யூடியூப் சேனல்கள் முடக்கம் - அனுராக் தாக்கூர்

 
anurag thakur

2021 மற்றும் 2022 காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பிய 94 யூடியூப் சேனல்கள் மற்றும் 19 சமூக ஊடக கணக்குகளை தடை செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். 

இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது: இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் போலியான செய்திகளை பரப்பி நாட்டின் இறையான்மைக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு நாட்டின் இறையான்மைக்கு எதிரான போலியான செய்திகளை வெளியிடும் இணையதளங்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன. 

anurag thakur

2021 மற்றும் 2022 ஆண்டு காலகட்டத்தில் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் போலி செய்திகளை பரப்பியதாக 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக ஊடக கணக்குகள் மற்றும் 747 யுஆர்எல்-களை மத்திய அரசு முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொரோனா தொற்று தொடர்பான போலிச் செய்திகள் பரவுவதை சரிபார்ப்பதற்காக, பத்திரிகை தகவல் மையத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவின் பிரத்யேக செல் 2020ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி உருவாக்கப்பட்டது. இதில் மக்கள் கொரோனா தொடர்பான தகவல்களைச் சரிபார்த்துக்கொள்ளலாம். கொரோனா தொடர்பான கேள்விகள் உட்பட 34,125 கேள்விகளுக்கு இந்த பிரிவு பதில் அளித்துள்ளது. இவ்வாறு  மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.