கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி

 
monkeypox

கேரளாவில் ஏற்கனவே 4 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று குரங்கம்மை அறிகுறிகளுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் குரங்கம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவையும் அந்த நோய் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் 9 பேர் இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளா மற்றும் டெல்லியில் தலா 4 பேருக்கும், தெலங்கானாவில் ஒருவருக்கும் குரங்கம்மை உறுதி செய்யப்பட்டது. கேரளா மற்றும் டெல்லியில் முதன் முதலாக குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நபர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

monkeypox

இந்நிலையில், கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து கேரளா திரும்பிய அந்த நபரை கொச்சி விமான நிலையத்தில் சோதனை செய்த போது அவருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.