வாக்கு வங்கி அரசியலால் ஹைதராபாத் விடுதலை நாளை கொண்டாட அரசியல் கட்சி தலைவர்கள் மறுத்து விட்டனர்.. அமித் ஷா

 
அமித் ஷா

வாக்கு வங்கி அரசியலால் ஹைதராபாத் விடுதலை நாளை கொண்டாட பல அரசியல் கட்சி தலைவர்கள் மறுத்து விட்டனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.

தெலங்கானா மாநிலத்தில், ஹைதராபாத் விடுதலை தின நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: 1947 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா சுதந்திரம் பெற்றது. இருப்பினும் ஹைதராபாத் மாநிலம் தொடர்ந்து நிஜாமின் ஆட்சியில் இருந்தது. அடுத்த 13 மாதங்களுக்கு மாநில மக்கள் நிஜாமின் ரசாக்கர்களின் கொடுங்கோன்மையைத் தாங்க வேண்டியிருந்தது.

சர்தார் வல்லபாய் படேல்

மாநில மக்கள் ஹைதராபாத் விடுதலையை அதிகாரப்பூர்வமாக கொண்டாட விரும்பினர். இந்த நாளை கொண்டாடுவோம்.  என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உறுதியளித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் வாக்கு வங்கி அரசியலால் கொண்டாட மறுத்து விட்டனர். சர்தார் படேல் ஜிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஐதராபாத் நகரை விடுவித்து, ஹைதராபாத் சுதந்திரம் பெற்றது சர்தார் படேல்லால் தான். ஹைதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட முடிவு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மோடி

சர்தார் படேல் இல்லாவிட்டால் ஹைதராபாத் விடுதலை பெற இன்னும் நீண்ட காலம் இருந்திருக்கும். நிஜாமின் ரசாக்கர்களை தோற்கடிக்க முடியாதவரை, பாரதத்தின் கனவு நனவாகாது என்பதை அவர் அறிந்திருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்த முன்னாள் ஹைதராபாத் மாநிலம் 1948 செப்டம்பர் 17ம் தேதியன்று இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டது.