ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் ஆதர்ஷ் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ராணுவ தளபதி தீபக் கபூர்.. பா.ஜ.க. தாக்கு

 
தீபக் கபூர், ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்ற ஆதர்ஷ் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ராணுவ தளபதி தீபக் கபூரை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது.


ஹரியானாவில் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் முன்னாள் ராணுவ தளபதி தீபக் கபூர் உள்பட ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரிகள் இணைந்தனர். இந்நிலையில், ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கலந்து கொண்டதற்காக முன்னாள் ராணுவ தளபதி தீபக் கபூரை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

அமித் மால்வியா

பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா  டிவிட்டரில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் முன்னாள் ராணுவ தளபதி தீபக் கபூர் கலந்து கொண்டார். தீபக் கபூர் மற்ற மூத்த ராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து ஆதர்ஷ் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். ஆயுதப்படைகளை (ராணுவம்) அவமானப்படுத்தியதற்காக அவர்கள் (குற்றம் சாட்ட ராணுவ அதிகாரிகள்) எந்த அரசு பதவி அல்லது அலுவலகத்தில் இருந்து தடை செய்யப்படலாம் என்று விசாரணை குழு கருத்து தெரிவித்தது என பதிவு செய்து இருந்தார்.

ஆதர்ஷ் குடியிருப்பு

கார்கில் போரில் உயிர் இழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்காக மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கொலபா பகுதியில், ஆதர்ஷ் வீட்டுவசதி சங்கம் சார்பில்  31 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பில், ராணுவ உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் விதிமுறைகளை மீறி வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட இருப்பது 2010ம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. இதனை விசாரிக்க ராணுவ அமைச்சகம் அமைத்த விசாரணை குழு, ஆதர்ஷ் குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கி கொண்ட ராணுவ அதிகாரிகள் அனைவருக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தது. அதன் விசாரணை அறிக்கையில், முன்னாள் ராணுவ தளபதி என்.சி.விஜ் மற்றும் தீபக் கபூர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்று இருந்தது.