ராகுல் காந்தியின் நடைப்பயண நிறைவு விழாவில் பங்கேற்பு?.. கட்சியுடன் கலந்து பேசி முடிவு- அகிலேஷ் யாதவ் தகவல்

 
பொய்களை சொல்வதில் பா.ஜ.க. உலக சாதனை படைத்து வருகிறது…. அகிலேஷ் யாதவ் தாக்கு

காஷ்மீரில் நடைபெற உள்ள ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயண நிறைவு விழாவில் கலந்து கொள்வது குறித்து கட்சியுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

ராகுல் காந்தி தற்போது மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு காஷ்மீரில் இந்த மாத இறுதியில் நிறைவடைய உள்ளது. ஸ்ரீநகரில் இம்மாதம் 30ம்  தேதியன்று இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு விழாவை காங்கிரஸ் நடத்த உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு தி.மு.க., சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவ சேனா பிரிவு உள்பட 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கடிதம் எழுதினார்.

மல்லிகார்ஜூன் கார்கே

இந்நிலையில், ராகுல் காந்தி தலைமயிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு விழாவுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது தொடர்பாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு அகிலேஷ் யாதவ் பதிலளிக்கையில், காங்கிரஸின் அழைப்பு வந்துள்ளது. கட்சியுடன் கலந்து பேசி முடிவு எடுப்பேன் என தெரிவித்தார். அண்மையில் உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நடந்தபோது, அதில் கலந்து கொள்ளுமாறு அகிலேஷ் யாதவுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்து இருந்தது. ஆனால் நடைப்பயணத்தில் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் நடைப்பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின நிறைவு விழாவில் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது. கடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லை மேலும் அந்த கட்சியை அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்தார் எனவே நடைப்பயண நிறைவு விழாவில் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.