2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்... சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு..

 
பொய்களை சொல்வதில் பா.ஜ.க. உலக சாதனை படைத்து வருகிறது…. அகிலேஷ் யாதவ் தாக்கு

2024 நாடாளுமன்ற தேர்தலில் கன்னோஜ் மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ளதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. சமாஜ்வாடி கட்சி தலைவரும், கர்ஹல் சட்டப்பேரவை உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் அம்மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். அகிலேஷ் யாதவ் தற்போது 2024ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

சமாஜ்வாடி

இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2024 மக்களவை தேர்தலில் மாநிலத்தில் கன்னோஜ் மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ளேன். நான் சும்மா உட்கார்ந்து இருந்தால் நான் என்ன செய்வேன்? நான் தேர்தலில் போட்டியிடுவேன், தேர்தலில் போட்டியிடுவதே எங்கள் வேலை. அதேசமயம் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவே இறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார். அகிலேஷ் யாதவ் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட தொகுதி கன்னோஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

டிம்பிள் யாதவ்

உத்தர பிரதேசம் மாநிலம் மெயின்புரி மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்த  சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கடந்த அக்டோபர் 10ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியானது. இதனையடுத்து அந்த தொகுதிக்கு டிசம்பர் 5ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக மறைந்த முலாயம் சிங் யாதவின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார்.