டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு.. நாளை முதல் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

 
டெல்லி காற்று மாசு


டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால்  தொடக்க பள்ளிகளுக்கு  நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  காற்று மாசு குறைந்து இயல்பு நிலை திருப்பும் வரை டெல்லியில் தொடக்க பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  

தலைநகர் டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையில் இருந்து வருகிறது.  கொரோனா கால கட்டத்தில் கட்டுபாட்டில் இருந்த காற்று மாசு தற்போது அதிகரித்து வருகிறது. டெல்லி அரசு முறையாக கட்டுப்பாடுகளை விதித்து காற்றுமாசை குறைக்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி காற்று மாசு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.  அதன் ஒரு பகுதியாக  கடந்த 5 ஆண்டுகளாகவே  டெல்லியில் தீபாவளி பண்டிகையின் போது  பட்டாசு வெடிக்க தடை நீடித்து வருகிறது.  

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்நிலையில் டெல்லியில் விதிக்கப்பட்டிந்த பட்டாசு தடையை  மீறி பலர் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடித்து கொண்டாடியதால், தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறியிருக்கிறது.  அதுமட்டுமின்றி  பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் கழிவுகளை விவசாயிகள் தீ வைத்து எரிப்பதால் எழும் புகைமூட்டம் டெல்லி முழுவதையும்  பரவியிருக்கிறது.  இதனால் காற்று மாசு அதிகரித்து , காற்றின் தரம் மிகவும்  மோசமடைந்துள்ளது.  

பள்ளி விடுமுறை

நொய்டா பகுதியில் காற்றின் தரம் மோசமாக உள்ளதால் அங்கு  8ம் வகுப்பு  வரை படிக்கும் மணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதையடுத்து, டெல்லியில் உள்ள 1, 800 பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுக்க   முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  உத்தரவிட்டுள்ளார்.   தேவைப்பட்டால் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றுமாசு சீராகும் வரை தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், காற்று மாசுவை குறைக்க முடிந்தவரை பொது போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.