வாய் தவறி அப்படி சொல்லிட்டேன் - மன்னிப்புக் கடிதம் எழுதிய ஆதிர் ரஞ்சன்..

குடியரசுத் தலைவர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மன்னிப்புக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், வாய் தவறி அந்த வார்த்தையை கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதி முதல்தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு , ஜிஎஸ்டி , அக்னிபாத் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. அத்துடன் மத்தியில் ஆளும் பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை எதிர்த்து தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால், மழைக்கால கூட்டத்தொடரே தொடர்ந்து முடங்கியது. அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி, மக்களவை - மாநிலங்களவை என இரு அவைகளிலும் சேர்த்து 27 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக அண்மையில் பதவியேற்ற திரவுபதி முர்முவை, காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ‘ராஷ்டிரபத்தினி’ என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆதிர் ரஞ்சன் முன்னதாகவே வாய் தவறி வந்துவிட்டதாக மன்னிப்பும் கேட்டுவிட்டார். ஆனால் சோனியா காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ராஷ்டிரபத்தினி என்கிற வார்த்தை வாய் தவறி வந்த வார்த்தை என்பதை தெளிவுபடுத்துகிறேன் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.