குவிந்து கிடந்த ரூ. 20 கோடி பணம்.. மேற்குவங்க அமைச்சரை கைது செய்த அமலாக்கத்துறை..

 
partha-chatterjee


ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில்  தொடர்புடைய  மேற்கு வங்க அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளருமான பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறை கைது செய்துள்ளனர்.  

மேற்கு வங்கம் மாநிலத்தில்  மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.  முன்னதாக கடந்த முறை  மம்தா  ஆட்சியின் போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்தவர் பார்த்தா சாட்டர்ஜி.  தற்போது அவர் தொழில் மற்றம் வர்த்தகத்துறை அமைச்சராகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராகவும்  பதவி  வகித்து வருகிறார்.  இந்நிலையில் பார்த்தா சாட்டர்ஜி, கடந்த ஆட்சி காலத்தில், நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனத்தில்  முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  

இது தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் ஆள்சேர்ப்பு செய்யும் செயல்முறையை மேற்பார்வையிட்ட  குழும் முரண்பட்ட அறிக்கையை சமர்பித்தது.  இந்த வழக்கை விசாரித்த  மேற்குவங்க உயர்நீதிமன்றம், முறைகேடு வழக்கை  சிபிஐ விசாரிக்கும்படி உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக  கடந்த 2 நாட்களாக கொல்கத்தாவில் உள்ள பார்த்தா சாட்டர்ஜி வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின்  வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை  நடத்தினர்.  

அந்தவகையில்  பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளரும் நடிகையுமான  அர்பிதா முகர்ஜியின் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது, ரூ. 2000 மற்றும் ரூ.500 நோட்டுக்களாக ரூ.20 கோடி ரொக்க பணத்தையும்,  20க்கும் மேற்பட்ட மொபைல் போன்களையும் அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.  பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி இன்று கைது செய்யப்பட்டார். மேலும் அர்பிதா முகஜியையும்  அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும்  முக்கிய பிரமுகர்கள் பலரது  பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.