குஜராத் சட்டப்பேரவை தேர்தல் - ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் இசுதான் காத்வி

 
Isudhan Gadvi

குஜராத் மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கான முதல்வர் வேட்பாளரை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. 

குஜராத் மாநில சட்டப் பேரவையின்  பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நிறைவடைகிறது. 2017-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 99 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதேபோல் காங்கிரஸ் கட்சி 77 இடங்களையும் கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில், குஜராத் தேர்தலுக்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அதன்படி குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதாவது  வருகிற டிசம்பர் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. 

aap

இந்த நிலையில், முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவுள்ளது.  பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின் போது அந்த கட்சி கையாண்ட கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற மக்களிடம் கருத்துக் கேட்கும் அணுகுமுறையை குஜராத்திலும் தொடர்ந்தது.ஆம் ஆத்மியின் குஜராத் முதல்வர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்பது குறித்து குஜராத் மக்களே தீர்மானிக்கலாம் என்று தெரிவித்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால் இதற்காக, 63570 00360 என்ற மொபைல் எண்ணை அறிவித்தார். மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப வெள்ளிக்கிழமை ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் எனத் தெரிவித்திருந்தார். இதற்காக சில கட்சி தலைவர்களின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. பட்டியலில் ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநில தலைவர் கோபால் இதாலியா, தேசிய பொதுச்செயலாளர் இசுதன் காத்வி, பொதுச் செயலாளர் மனோஜ் சோராதியா உள்ளிட்டோர்களின் பெயர்கள் இருந்தன.

aravind

இந்நிலையில், குஜராத் மாநில ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இசுதான்ன் காத்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அம்மாநில மக்கள் பெரும்பாலானோர் அவரையே தேர்வு செய்துள்ளதால், இசுதான் காத்வியை ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.