ஜனாதிபதி தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவு - ஆம் ஆத்மி அறிவிப்பு

 
 Yashwant Sinha

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் இந்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில்,  புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 18ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  அதேபோல் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களமிறக்கப்பட்டார். இருவரும் தற்போது தங்களுக்கு ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சிரோமணி அலிகா தளம், தமிழகத்தில் அதிமுக, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

aap

இதேபோல் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,  எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதனை ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞய் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.