திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்ட விவகாரம்.. அசாதுதீன் ஓவைசி கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு

 
ஏ.ஐ.எம்.ஐ.எம்.

கர்நாடகாவில் இத்கா மைதானத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தியை கொண்டாடக் கூடாது என்று அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் ஹூப்ளி தர்வாட் மாநகராட்சியில் உள்ள இத்கா மைதானத்தில் அடுத்த மாதம் திப்பு சுல்தான் ஜெயந்தியை கொண்டாட அனுமதி கோரி ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி மற்றும் வேறு சில அமைப்புகளும் மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து இத்கா மைதானத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தியை கொண்டாட ஹூப்ளி தர்வாட் மாநகராட்சி (எச்.டி.எம்.சி.) சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.

திப்பு சுல்தான்

இந்நிலையில் இத்கா மைதானத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தியை கொண்டாடுவது தொடர்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தார்வாட் மாவட்ட இணைச்செயலாளர் விஜய் குண்ட்ரால், ஹூப்ளி தர்வாட் மாநகராட்சியிடம் அனுமதி பெற்று திப்பு சுல்தான் ஜெயந்தியை கொண்டாடுவதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இத்கா மைதானத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தியை நடத்துவதற்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் மாவட்ட தலைவர் நசீர் அகமது ஹொன்யால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நசீர் அகமது ஹொன்யால்

இது தொடர்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் மாவட்ட தலைவர் நசீர் அகமது ஹொன்யால் கூறியதாவது: இத்கா மைதானத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாடப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். இத்கா மைதானம் நமது முன்னோர்களால் பல ஆண்டுகளாக தொழுகைக்காக பயன்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும், இரண்டு முறை கொடியேற்றப்பட வேண்டும் என்றும், இரண்டு முறை பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இங்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. திப்பு ஜெயந்தியை விடுகளிலும் கொண்டாடலாம். நமது முன்னோர்கள் திப்பு ஜெயந்தியை இத்கா மைதானத்தில் கொண்டாடியதில்லை. விஜய் குண்ட்ராலின் முடிவு அவருடையது, கட்சியின் முடிவு அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார். திப்பு சுல்தான் ஜெயந்தி விவகாரத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.