8 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு வந்த தபால் கடிதம், ஆவணங்களை வழங்காமல் பதுக்கிவைத்த தபால்காரர்

 
postman

எட்டு வருடங்களாக பொதுமக்களுக்கு வந்த அனைத்து தபால் கடிதங்கள் மற்றும் ஆவணங்களை வழங்காமல் பதுக்கி வைத்த அரசு தபால்காரரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கன்னகிரி தாலுக்காவில் உள்ள கௌரிபுரா தபால் நிலையத்தில் இருந்து கடந்த 8 வருடமாக பொதுமக்களுக்கு எந்த ஒரு தபால் கடிதமோ அல்லது ஆவணங்களோ வராமல் தவித்து வந்தனர். கௌரிபுரா தபால் நிலையத்தில் இருந்து பசரிஹரா, தேலாபுரா , பைலாகம்புரா உள்ளிட்ட 5 கிராமங்களுக்கு அனைத்து தபால்கள் வழங்கப்படும். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக இந்த 5 கிராம மக்களுக்கு தபால் நிலையத்தில் இருந்து ஒரு தபால் கூட வழங்கப்படவில்லை. 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தபால் நிலையம் அருகே இருந்த குப்பைத்தொட்டியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு நூற்றுக்கணக்கான ஆதார் கார்டு , பான் கார்ட் என பல்வேறு ஆவணங்கள் கொட்டி கிடந்தன. இதை சிறுவர்கள் கிராம மக்களிடம் தெரிவிக்கவே மக்கள் குப்பையில் இருந்த ஆவணங்களை ஆராய்ந்து பார்த்த போது பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மக்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட ஆதார் அட்டை, பான் கார்ட், வங்கி டெபிட் கார்டு, செக் புக், அரசு வேலையில் சேர அனுப்பப்பட்ட கடிதம், தங்க நகை கடன் ஜப்தி கடிதம், எல் ஐ சி பிரீமியம் கட்ட வலியுறுத்தி அனுப்பப்பட்ட கடிதம் என பல்வேறு ஆவணங்கள் இந்த குப்பையில் கிடைத்தது. 

பல வருடங்களாக தங்களுக்கு வர வேண்டிய தபால்கள் குப்பையில் இருப்பதை அறிந்த கிராம மக்கள் தங்களது ஆவணங்கள் இங்கு உள்ளதா என படையெடுப்பு குப்பையில் தேட துவங்கினர். கௌரிபுரா தபால் நிலையத்தில் கடந்த பத்து வருடங்களாக தபால்காரராக பணியாற்றி வரும் வினய் முதல் இரண்டு வருடங்கள் மக்களுக்கு முறையாக தபால்களை வழங்கி வந்துள்ளார். ஆனால் கடந்த 8 வருடமாக அவர் மக்களுக்கு வழங்க வேண்டிய கடிதங்களை வழங்காமல் அதை பதுக்கி வைத்துவிட்டு அனைத்தும் மக்களிடம் வழங்கப்பட்டதாக அரசிடம் தெரிவித்து வந்துள்ளார். சிறுவர்கள் குப்பையில் ஆவணங்களை கண்டெடுத்த பிறகு வினய் இன் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே வினய் மீது துறை சார்ந்த விசாரணைக்கும் நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.