செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு, வந்தே பாரத் ரயிலில் சிக்கிக்கொண்ட நபர்..

 
செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு,  வந்தே பாரத் ரயிலில் சிக்கிக்கொண்ட நபர்.. 
 

ஆந்திராவில் செல்ஃபி எடுப்பதற்காக வந்தே பாரத் ரயிலில் ஏறிய நபர் அதில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவையை  பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார்.  அந்தவகையில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களை இணைக்கக்கூடிய வகையில், செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரயில் சேவை கடந்த  15ம் தேதி தொடங்கப்பட்டது.  இந்த ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி 15ம் தேதி காலை 10 மணியளவில்  டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.  இது நாட்டின் 8-வது வந்தே பாரத் ரயிலாகும்.  முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயிலில்,  விமானத்தில் இருப்பதை போன்ற இருக்கைகள், முழுமையான ஏசி வசதி செய்யப்பட்ட நவீன வசதிகளுடன் அமைந்திருக்கும்.   

வந்தே பாரத் ரெயில்

இந்த நிலையில்  ஆந்திர மாநிலம் ராஜமஹேந்திரவரத்தில் இருந்து  வந்தே பாரத் ரயிலில் செல்பி எடுப்பதற்காக ஏறியிருக்கிறார். அவர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்த போது ரயில் புறப்பட தயாராகியுள்ளது.இந்த ரயிலில் தானியங்கி கதவு என்பதால் கதவுகள் தானாகவே மூடிக்கொள்ளும். இதனையடுத்து அவர் கதவை திறக்க முயன்று அவரால் திறக்க முடியவில்லை. இதனால் அவர்  செய்வதறியாமல் திகைத்து நின்றார்.  அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகரிடம்  ரயிலுக்குள் சிக்கியது குறித்து தெரிவித்த போது , அவரும் தங்களால் எந்த உதவியும் செய்ய முடியாது என்று  கைவிரித்திருக்கிறார்.

மேலும் அடுத்ததாக இந்த ரயில் விஜயவாடாவில் தான் நிற்கும் எனவும், அதுவரை டிக்கெட் எடுத்து பயணிக்கும் படியும் கூறியிருக்கிறார்.  இதனால் டிக்கெட் எடுத்து விஜயவாடா வரை பயணித்த அவர், மீண்டும்  விஜயவாடாவில் இருந்து மீண்டும் ராஜமஹேந்திரவரத்திற்கு  திரும்பியிருக்கிறார்.  ரயிலில் ஏறி செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட இருவர் 159கி.மீ தூரம் பயணித்த இந்த சம்பவத்தை, சக ரயில் பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.