அமித் ஷாவின் வாகன அணிவகுப்பின் போது மர்ம கார்... தெலங்கானாவில் பரபரப்பு

 
amit shah

தெலங்கானா மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வாகன அணிவகுப்பின் போது மர்ம கார் ஒன்று இடையூறாக நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மத்திய அரசு சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன் தினம் தெலங்கானா மாநிலத்திற்கு வருகை தந்தார். நேற்று முன் தினம் மாலை அம்மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இந்நிலையில், நேற்று அமித் ஷா ஐதராபாத் அருகே பேகம்பேட்டில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு செல்வதாக திட்டமிடப்பட்டு செல்லும் வழியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில்,  அமித்ஷாவின் வாகன அணிவகுப்பு அந்த ஓட்டலுக்கு உள்ளே நுழைய முயன்றபோது, வழியில் இடையூறாக மர்ம கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் அமித்ஷாவின் வாகன அணிவகுப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், அந்த மர்ம காரை பாதுகாவலர்கள் அகற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில் இடையூறாக நிறுத்தப்பட்ட அந்த கார் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.   இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் இருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கான்வேயில் காரை நிறுத்தி அவரது பாதுகாப்பில் குளறுபடியை ஏற்படுத்தியுள்ள விவகாரம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.