கைவிட்ட குழந்தைகள்.. உத்தர பிரதேச அரசுக்கு ரூ.1.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை உயில் எழுதிய 85 வயது முதியவர்

 
நாது சிங்

உத்தர பிரதேசத்தில் தனது மகன் மற்றும் மகள்கள் தன்னை சரியாக கவனிக்காததால், ரூ.1.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை உத்தர பிரதேச அரசுக்கு 85வது வயது முதியவர் உயில் எழுதியுள்ளார்.

உத்தர பிரதேசம் முசாபர்நகரை சேர்ந்தவர் 85 வயதான நாது சிங். இவருக்கு ஒரு மகன் மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர். மகன் பள்ளி ஆசிரியராக இருக்கிறார், சஹாரன்பூரில் வசித்து வருகிறார். நாது சிங்கின் மகன் மற்றும் நான்கு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.  மனைவி இறந்த பிறகு வயதான நாது சிங் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன் தனது கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்துக்கு சென்றார். 

உத்தர பிரதேச அரசு

அது முதல் நாது சிங் அங்கு வசித்து வருகிறார். ஆனால் நாது சிங்கின் குடும்பத்தை சேர்ந்த யாரும் அங்கு சென்று அவரை சந்திக்கவில்லை. இதனால் நாது சிங் மிகவும் மனமுடைந்து போனார். இதனால் தனது ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலத்தை மாநில அரசுக்கு உயில்  எழுதி வைத்தார். தனது மறைவுக்கு பிறகு அந்த நிலத்தில் பள்ளி அல்லது மருத்துவமனையை கட்டும்படி கேட்டுக்கொண்டுள்ளார். 

பள்ளி

மேலும் அந்த உயிலில், ஆராய்ச்சி மற்றும் கல்வி பணிகளுக்காக என் உடலை தானம் செய்ய முடிவு செய்துள்ளேன். எனது இறுதி சடங்கில் எனது மகன் மகள்களை அனுமதிக்கக் கூடாது என்று நாது சிங் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக நாது சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த வயதில் நான் என் மகள் மற்றும் மருமகளுடன் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் என்னை சரியாக நடத்தவில்லை. அதனால்தான் சொத்தை மாற்ற (அரசுக்கு கொடுக்க) முடிவு செய்தேன் என தெரிவித்தார்.