பறவைக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 8,000 கோழிகள் உயிரிழப்பு!

 
பறவைக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 8,000 கோழிகள் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலத்தில் பறவைக் காய்ச்சலுக்கு 8,000 கோழிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மேற்கு வங்காவரி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பறவை காய்ச்சல் காரணமாக கோழிப் பண்ணைகளில் வளர்க்கப்படும் பல கோழிகள் தினமும் இறந்து வருகிறது. குறிப்பாக ராஜ மகேந்திரம், மேற்கு கோதாவரி மாவட்டம் தனுகு, வேல்பூர் உள்ளிட்ட பகுதிகள் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழிப் பண்ணை வைக்கவும் கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பறவை காய்ச்சலை தடுப்பதற்காக தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் கோழி லாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுகிறது.

ஆந்திராவின் அண்டை மாநிலமான தெலங்கானாவிலும் பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவிவரும் நிலையில், சங்காரெட்டி, மேதக் மாவட்டங்களில் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் கோழிகள் உயிரிழந்துள்ளன. பிப்ரவரியில் ஆந்திராவில் பறவைக்காய்ச்சலால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் தெலங்கானாவிலும் பரவல் அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இருந்து கோழிகள் தெலங்கானா கொண்டுவரப்படுவது தடுக்கப்பட்ட போதிலும், கம்மம் வழியாக பறவைக் காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.