பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி

ஆந்திராவில் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர்.
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள கொடவுரட்லா மண்டலம் கைலாசப்பட்டினம் பகுதியில் தனியார் வெடிமருந்து உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 32 தொழிலாளர்கள் பணியில் இருந்த நிலையில் திடிரென பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி தீ பிடித்தது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு சில நொடிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் முழு தொழிற்சாலைக்கும் பற்றியது. அங்குள்ள நிலைமைகளைப் பார்க்கும்போது மனித உடல்கள் ஆங்காங்கே சிதறிய காட்சிகளாக உள்ளது.
இதுவரை ஆறு உடல்கள் முற்றிலும் அடையாளம் காண முடியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சந்திரபாபு நாயுடு உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கேட்டறிந்து காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன். ரெட்டி இந்த தகவல் அறிந்து அந்த பகுதி கட்சி நிர்வாகிகளை களத்திற்கு அனுப்பி தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.