டிஜிட்டல் பரப்புரை, ஆன்லைனில் மனுதாக்கல், வீட்டிலிருந்தே வாக்களிக்க வசதி.. 5 மாநில தேர்தலில் அதிரடி அறிவிப்புகள்..

 
தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா

டிஜிட்டல் முறையில் பரப்புரை, முதியவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க வசதி, ஆன்லைன் மூலம் மனுதாக்கல் என 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.


உத்தரகண்ட், உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தேர்தல் தேதிகள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். உத்திரபிரதேசத்தில் 403, பஞ்சாபில் 117, மணிப்பூரில் 60 , மணிப்பூரில்  70,  கோவாவில் 40 தொகுதிகள் என மொத்த 690  சட்டமன்ற தொகுதிகளுக்கு  தேர்தல் நடைபெற உள்ளன.  மேலும், 5 மாநிலங்களில் மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.  அவர்களில் 8.55 கோடி பெண் வாக்காளர்கள் எனவும் 24.98 லட்சம் பேர் முதல் முறை வாக்கு செலுத்துபவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மாநில தேர்தல்

கொரோனா  சூழலில் சட்டசபை தேர்தலை நடத்துவது சவாலானது என்றும் , கூடுதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டு கள ஆய்வின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுகிறது என்றும்  தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.   தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை  16 % அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்,  ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக 1,500 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும்படி ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

தேர்தல் ஆணையம்

இந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், கோரொனா பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம் என்றும், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்குகள் அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வேட்பாளர்கள் ஆன்லைன் முறையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்,  அரசியல் கட்சிகள் முடிந்தவரை டிஜிட்டல் முறையில் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.  அதேபோல் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாகவும், பொதுமக்கள் புகார்களை இ-விஜில் செயலில் மூலம் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சுஷில் சந்திரா

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட் மாநிலங்களில்  தலா 40 லட்சமும், கோவா மற்றும்  மணிப்பூர் மாநிலங்களில் தலா 28 லட்சம் வரையிலும் வேட்பாளர்கள் செலவிட அனுமதிக்கப்படுவதாகவும் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம்   நீட்டிக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஜனவரி 15ம் தேதி வரை பிரச்சார பொதுக்கூட்டங்கள் மற்றும்  ஊர்வலத்திற்கு தடை விதித்தும்,  காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பரப்புரை செய்ய அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. அதோடு  வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.