சபரிமலையில் மண்டல, மகர பூஜை காலத்தில் 50 லட்சம் பக்தர்கள் தரிசனம்.. காணிக்கை எவ்வளவு தெரியுமா??

 
sabarimala

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில்  மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை சீசனில் 50 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.  

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை  மற்றும் மகர விளக்கு பூஜைகள் விமரிசையாக நடைபெற்றது. மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கி  டிசம்பர் 27-ந் தேதியுடன் முடிவடைந்து, நடை சாத்தப்பட்டது.  அதன்பிறகு  ஜனவரி 31ம் தேதி மகர விளககு பூஜை காலம் தொடங்கியது. இந்த காலங்களில் தமிழகம், கேரளம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மாலையணிந்து, விரதமிருந்து ஐயப்பனை தரிசித்துச் சென்றனர்.  நாள்தோறும் சாராசரியாக 80 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் பேர் வரை சபரிமலையில் குவிந்தனர்.  இந்த காலங்களில்  சுமார் 50 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் ஐயப்பனை தரிசனம் பெற்றுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவ்வாறு சபரிமலை வந்த பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த  உண்டியல்களில் பணம் மற்றும்  நாணயங்களை  காணிக்கையாக செலுத்தினர்.

sabarimala

இதனால் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த அனைத்து உண்டியல்களும் நிரம்பி விட்டதாக தேவஸம்போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் மண்டல பூஜை இன்றோடு நிறைவு பெறும் நிலைய்ல், இன்று  இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பின்னர்  நாளை காலை 7 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டுவிடும்.   மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந் தேதி தான்  கோவில் நடை திறக்கப்படும். இந்த சூழ்நிலையில் மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் பக்தர்கள்  சபரிமலையில்  செலுத்திய காணிக்கையை கணக்கிடும் பணி தற்போது தீவிரமாக  நடைபெற்று வருகிறது. இதில் ரூபாய் நோட்டுக்களாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை மட்டும்  பக்தர்கள்  செலுத்திய காணிக்கை  ரூ. 316 கோடியாகும்.

sabarimala

இதில்  நாணயங்களை எண்ணும் பணி தான் ஊழியர்களுக்கு சவாலாக உள்ளது. ஏனெனில் நாணயங்கள் மட்டும் 3 அறைகளில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளதாம். இந்த மொத்த நாணயங்களின் மதிப்பு  ரூ.7 கோடி இருக்கும் என தேவசம்போர்டு ஊழியர் தெரிவித்துள்ளார். வழக்கமாக காணிக்கை எண்ணும் பணி, பாதுகாப்பு நிறைந்த பண்டாரப்புரா மண்டபத்தில் நடைபெறும்.  ஆனால்  இந்த ஆண்டு அதிக அளவு காணிக்கை கிடைத்துள்ளதால், பண்டாரபுரா மண்டபத்தில் பணியாளர்கள் உட்கார இடம் இல்லாததால், பண்டாரப்புரா மண்டபத்திற்கு வெளியே வாவர் ஓடையின் முன்பு தார்ப்பாய் விரிக்கப்பட்டு நாணயங்கள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. அத்துடன் அன்னதான மண்டபம் முன்பும் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதிலும்,  பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் உள்ள கருவூலங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. அவற்றையும் திறந்து காணிக்கை பணம் முழுவதையும் எண்ணி முடித்தால், ரூ.330 கோடி வரை வசூலாக வாய்ப்பு இருப்பதாக தேவசம்போர்டு கணித்துள்ளது.