பொற்கோவில் அருகே மர்ம பொருள் வெடிப்பு - 5 பேர் அதிரடி கைது!

 
Golden Temple

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மர்ம பொருள் ஒன்று வெடித்த சம்பவம் தொடர்பாக 5பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

சீக்கியர்களின் புனித தளமான பொற்கோவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பஞ்சாப் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் பயங்கர சப்தத்துடன் மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் கமிஷனர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். அந்த சம்பம் தொடர்பாக தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், மர்ம பொருள் வெடிப்பு தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் தேசிய புலனாய்வு அமைப்பு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

பொற்கோயில் அருகே ஸ்ரீ குரு ராமதாஸ் ஜி நிவாஸ் விடுதியின் வெளியே வெடிகளை பயன்படுத்தி விபத்தை  ஏற்படுத்தியுள்ளனர். அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே கடந்த சில நாட்களாக சிறிய அளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து வருகிறது. இந்த வாரத்தில் 3வது வெடிப்பு சம்பவம் இதுவாகும். பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் குண்டு வெடிப்பை நடத்தியதாக கைதான 5 பேரும் விசாரணையில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு மர்ம பொருள் வெடித்ததில் சில கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதில் ஒருவர் காயமடைந்தது குறிப்பிடதக்கது.