2,50,000 நிறுவனங்களை நீக்கியது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் – டி.கே.ரங்கராஜன்

 

2,50,000 நிறுவனங்களை நீக்கியது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் – டி.கே.ரங்கராஜன்

2,50,000 நிறுவனங்களை பட்டியலில் இருந்து நீக்குவதன்மூலம் தவறான செயல்களில் ஈடுபட்ட இயக்குநர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள இது உதவாதா? தவறான செயல்களில் ஈடுபட்ட இயக்குநர்கள்மீது அரசு எத்தகைய நடவடிக்கை எடுக்க இருக்கிறது?

இரண்டரை லட்சம் நிறுவனங்களை கம்பெனிகளுக்கான பதிவேட்டில் இருந்து நீக்கியது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ஒரேயடியாக 2,50,000 நிறுவனங்களை  பட்டியலில் இருந்து அவசர அவசரமாக நீக்கியுள்ள பதிவாளரின் செயல், அந்த நிறுவனங்களுக்கு வந்து சேர வேண்டிய தொகை மற்றும் அதன் கடன்களையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்கான தொகை ஆகிய ஏற்பாடுகள் குறித்து அவர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற 248(6)ஆவது பிரிவிற்கு உகந்த வகையில் நடந்து கொள்ளவில்லை. இதன் விளைவுகள் படுமோசமானதாக உள்ளன. திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்கள், தீர்க்க வேண்டிய பொறுப்புகள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாத நிலையில் இந்த நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

FM orders removal of 2,50,000 companies

இது மிக அதிகமான செலவு மற்றும் காலத்தை கோரும்படியான ஒரு செயலாகும். இந்த நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டிய வரிகளை எவ்வாறு வசூலிக்க முடியும்? அரசு நிர்வாகிகள் அதிக நேரத்தை செலவு செய்வதில் ஈடுபட வேண்டியிருக்கும் என்பதோடு, அரசின் கருவூலத்திற்கு மிகப்பெரும் இழப்பையும் இது ஏற்படுத்தாதா? இந்த நிறுவனங்களிடமிருந்து வரவேண்டிய ஜிஎஸ்டியின் நிலை என்னவாக இருக்கும்? இத்தகைய நிறுவனங்களை பட்டியலில் இருந்து நீக்குவதன்மூலம் தவறான செயல்களில் ஈடுபட்ட இயக்குநர்கள் சட்டத்தின்  பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள இது உதவாதா? தவறான செயல்களில் ஈடுபட்ட இயக்குநர்கள்மீது அரசு எத்தகைய நடவடிக்கை எடுக்க இருக்கிறது? இந்த நடவடிக்கையின் பின்விளைவுகளை சமாளிக்க உங்கள் அமைச்சகம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஒருபுறத்தில் இந்த நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளை அதிகாரிகள் பெற முடியும் என்பதோடு, தவறாகச் செயல்பட்ட இயக்குநர்கள் சட்த்தின் பிடியில் இருந்து தப்பிக்க அனுமதிக்காமல் இருக்கவும் முடியும்என கூறியுள்ளார்.