கல்லூரி ஆண்டு விழாவில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என முழக்கமிட்ட மாணவர்கள்

 
2 students in Bengaluru booked for shouting 'Pakistan zindabad' slogans at college fest

பெங்களூரு நகரில் நேற்று மாரத்தஹள்ளி என்ற பகுதியில் உள்ள நியூ ஹரிசான் தனியார் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரி விழாவின் போது கூட்டத்திற்கு நடுவே ஒரு மாணவி, ஒரு மாணவன் இருவரும் பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

பாகிஸ்தான் ஆதரவாக முழக்கமிட்ட ஒரு மாணவனை சில மாணவர்கள் பிடித்து மன்னிப்பு கேட்க வைத்து கர்நாடக தாய் வாழ்க என்று கூற வைத்தனர். வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் மாரத்தஹள்ளி காவல்துறையினர் விசாரணை நடத்தி பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிட்ட மூன்று மாணவர்களின் அடையாளத்தை கண்டுபிடித்தனர். அதே கல்லூரியில் படித்து வரும் கர்நாடக மாநிலம் தாவண்கரே மாவட்டத்தை சேர்ந்த ரியா (வயது 18) பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரியான் (வயது 18) ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவன் தினகர் (வயது 17) ஆகிய மூவரும் விழாவில் நடுவே பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிட்டுள்ளனர். மாணவர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153, 505(1) B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு மூன்று மாணவர்களையும் காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்திய போது தாங்கள் வேண்டுமென்றே இதை செய்யவில்லை என்றும் கல்லூரி விழாவின் போது மாணவர்கள் அவரவர்கள் பிடித்த அணிக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி வந்ததாகவும் கூறினர்.

ஆர்சிபி வாழ்க, சென்னை சூப்பர் கிங்ஸ் வாழ்க, என பலர் ஏட்டிக்கு போட்டியாக அவர் அவரது விருப்பமான அணிகளுக்கு ஆதரவாக கோஅஹாங்களை எழுப்பினர். ஆசியாவில் இருந்து பாகிஸ்தான் டி20 உலக கோப்பையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதால் நாங்கள் பாகிஸ்தானுக்கு வாழ்த்துக்கள் என கிண்டலாகவே தெரிவித்தோம், அதற்காக தற்பொழுது வருந்துகிறோம் என தங்கள் விளக்கத்தை அளித்தனர். மாணவர்கள் உள்நோக்கம் கொண்டு இந்த காரியத்தை செய்யவில்லை என்ற காரணத்தால் அவர்களை கைது செய்யாமல் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்‌. இன்று மூன்று மாணவர்களையும் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக காவல்துறை உத்திரவிட்டுள்ளனர்.