வரலாற்றில் முதன்முறையாக திருப்பதி கோயில் உண்டியலில் ரூ.140.34 கோடி காணிக்கை

 
tirupati undiyal

திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல் முறையாக ஆகஸ்ட்  மாதத்தில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ 140.34 கோடி காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

திருப்பதியில் காணிக்கை உண்டியல் வசூல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதம் 22.22 லட்சம் பக்தர்கள்  சுவாமி தரிசனம் செய்து  உண்டியலில் காணிக்கையாக ₹ 140.34 கோடி செலுத்தினர்.  தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாதத்தில் ₹ 140.34 கோடியாக வருவாய் கிடைத்துள்ளது. 1.5 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 10.85 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 47.74 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. திருமலையில் ₹ 25 கோடி  அதிநவீன பரக்காமணி உண்டியல் காணிக்கை என்னும் மையம் கட்டப்பட்டுள்ளது.

இந்த மையத்தை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் பிரம்மோற்சவத்திற்காக வரும் 27ஆம் தேதி வந்து பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க வருகிறார். அப்பொழுது இந்த பரக்காமணி கட்டிடத்தையும் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறார். இந்த கட்டிடத்தில் இரு புறங்களிலும் கண்ணாடி சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் உண்டியல் காணிக்கை என்னும் பணிகள் அனைத்தையும் பக்தர்கள் வெளியில் இருந்து காணும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ₹ 2.5 கோடி  செலவில் நாணயங்கள் என்னும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாணயங்கள் அதில் செலுத்தியவுடன் 13 விதமான நாணயங்கள் ரகம் பிரித்து  ஒவ்வொரு பாக்கெட்டிலும் 100 நாணயங்களாக பேக் செய்து கவர்  செய்து பாக்கெட் செய்யப்பட உள்ளது.  இந்த நாணயங்கள் மீண்டும் பக்தர்களுக்கு நாணய பிரசாதமாக திருமலையில் அறைகள் பெற்று முன்பணத்திற்கு  பக்தர்களுக்கு வழங்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என  செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.