காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞர்!

 
lovers

ஆந்திர மாநிலம் நெல்லூரில் காதலியை துப்பாக்கியால் சுட்டு தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சாப்ட்வேர் ஊழியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ,நெல்லூர் மாவட்டம் பொடலகுரு மண்டலம், தாட்டிப்பர்தியை சேர்ந்த மாலபதி சுரேஷ்ரெட்டி மற்றும் காவ்யா ஆகியோர் பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் பெங்களூரில் முன்பு வேலை பார்த்து வந்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தாட்டிபர்த்தியில் உள்ள வீட்டிலிருந்து பணிபுரிந்து வந்தனர்.  

சுரேஷ் -  காவ்யா காதல் விவகாரம் காவ்யாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் சுரேஷை திருமணம் செய்ய காவ்யாவின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இதனால் காவ்யா சுரேஷிடம் சரியாக பேசவில்லை என தெரிகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை சுரேஷ் துப்பாக்கியுடன்  காவ்யா வீட்டிற்கு சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.  பின்னர் அவரும் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அதிக ரத்தபோக்கு ஏற்பட்டு  அவதிப்பட்ட காவ்யாவை அக்கம் பக்கத்தினர் 108 மூலம் நெல்லூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார். பொடலகுரு தாசில்தார் சுதிர்பாபு, போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.  காதலித்த பெண்ணை சுரேஷ் துப்பாக்கியால் சுட்டதற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுரேஷ்க்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.