Home விளையாட்டு கிரிக்கெட் துண்டு ஒரு தடவ தான் கீழ விழும்… பழிக்குப் பழி… மண்ணை கவ்வினார்கள் இந்தியாவின் விருந்தாளிகள்!

துண்டு ஒரு தடவ தான் கீழ விழும்… பழிக்குப் பழி… மண்ணை கவ்வினார்கள் இந்தியாவின் விருந்தாளிகள்!

ரத்த பூமியான ஆஸ்திரேலியாவிலேயே அவர்களை மண்ணைக் கவ்வ வைத்துவிட்டோம். நம்ம சொர்க்க பூமியில் அதெல்லாம் ஒரு மேட்டரா என்ற பாணியிலேயே முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தை எதிர்கொண்டது இந்தியா. ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது என்று சொல்வார்கள். அது இந்தியாவுக்கும் ஆகாமல் போனது. இதன் விளைவாக 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியையும் சோகப் பரிசாகப் பெற்றது. டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திலிருந்து சொய்ங்… என நான்காவது இடத்திற்கும் இந்தியா இறக்கப்பட்டது.

Image

ஆசிய மண்ணில் ஜாம்பாவானான இந்தியாவே வீழ்த்தி விட்டோம் என்ற மிதப்பு இங்கிலாந்திடம் ஆங்காங்கே வெளிப்பட்டது. அதே பூஸ்டோடு களமிறங்கியது. பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா இரண்டாவது டெஸ்டில் களமிறங்கியது. டாஸ் வின் செய்தால் மேட்ச் வின் என்பதைப் போல கேப்டன் கோலி டாஸ் வின் செய்து நிம்மதி பெருமூச்சு விட்டார். ரசிகர்களும் தான். ஏனென்றால் சென்னை ஆடுகளத்தின் ஹிஸ்டரி அப்படி.

Image

பேட்டிங்கை தேர்வுசெய்த உடனே உள்ளே வந்த ரோஹித் சர்மா பட்டாசாக வெடித்துத் தள்ளிவிட்டார். அந்தப் பக்கம் யார் வந்துட்டு போனா எனக்கென்ன என்பது போல அடி பொளந்து கட்டிவிட்டார். வழக்கமாக 100 அடித்த பிறகு அதிரடி காட்டும் ரோஹித், டெஸ்டில் அதற்கு எதிரான பாணியைக் கடைப்பிடித்தார். 100 அடித்த பிறகு மியூட் மோடுக்கு போய்விட்டார். அவர் 161 ரன்கள் எடுக்காவிட்டால் இந்தியா 300 ரன்களைத் தாண்டியிருப்பது கடினமே. கூடவே அதிகபட்சமாக தென்றல் ரஹானே 67 ரன்களும் சூறாவளி பண்ட் 58 ரன்களும் எடுத்து அணிக்கு அணிலாக உதவினார்கள்.

Image

முன்பே சொன்னது போல ஆடுகளம் இரண்டாம் நாளில் ஸ்பின்னுக்குச் சாதமாக மாறிவிடும். அத அந்த ஆண்டவனால கூட மாத்த முடியாது. அதற்கு டிரெய்லராக முதல் நாளில் 300 ரன்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி அடுத்த 4 விக்கெட்டுகளை வெறும் 29 ரன்களுக்கு இழந்தது. மெயின் பிக்சர் தான் இங்கிலாந்தின் பேட்டிங்கும் இந்தியாவின் பவுலிங் அட்டாக்கும்.

Image

சேப்பாக்க கில்லி அஸ்வின் ஒவ்வொருவரையும் சொல்லி சொல்லி விக்கெட் எடுக்க வந்தவர்கள் பேட்ஸ்மேன்கள் கல்யாணத்துக்கு வந்த விருந்தாளி போல வந்த வேகத்தில் சில ரன்களை மொய்யாக வைத்து பெவிலியன் திரும்பிக்கொண்டே இருந்தனர். அக்சர் படேல் அறிமுக போட்டியில் முதல் விக்கெட்டாக ரூட்டை தூக்கியது தான் ஆட்டத்தின் முக்கியமான ட்விஸ்ட். ஆறுதல் பரிசாக விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் மட்டும் 42 ரன்கள் எடுத்திருந்தார். 134 ரன்களுக்கு அஸ்வினின் சூழலில் சிக்கி சுருண்டது.

Image

மயிரிழையில், அதாவது 5 ரன்களில் பாலோஆனில் இருந்து இங்கிலாந்து அணி தப்பியது. இதனால் இரண்டாம் இன்னிங்ஸை ஆடவந்த இந்திய அணியின் கில் வழக்கம் போல விக்கெட்டைப் பறிகொடுத்துச் சென்றுவிட்டார். நேற்று மூன்றாம் நாள் இதன்பிறகு தொடங்கியது. வாம்மா மின்னல் போல உள்ளே வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. புஜாரா, ரோஹித் அடுத்தடுத்து அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். ஆடுகளம் எந்தளவிற்கு உக்கிரமாக இருக்கிறது என்பதற்கு இந்த இரண்டு விக்கெட்டுகளே சாட்சி.

Image

கடந்த இன்னிங்ஸில் டக்அவுட்டான கேப்டன் கோலி அதிரடி காட்டுவாரா என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதனைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே அவரின் ஆட்டம் இருந்தது. அதிரடி ஆட்டம் தேவையென்பதால் ரஹானேக்கு முன்பு பண்ட் இறக்கப்பட்டார். களத்தில் ஆடும்போது காய்கள் வெட்டப்படுவது இயல்பு தான். அதுபோல பண்ட் அவுட்டாகி திரும்பினார். ரஹானேவும் விரைவாகவே வீழ்ந்தார். கண்ணை மூடி திறப்பதற்கு அக்சரும் அவுட்டாக தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கோலி மட்டுமே நிலைத்து நின்றார். 106-6 என்ற நிலையில் தான் மாஸ்டர் அஸ்வின் உள்ளே வந்தார்.

Image

சென்னையில் எப்படி ஆட வேண்டும் என்பதை உலகிற்கே பாடம் எடுத்தார். அதனால் தான் அவரின் மாஸ்டர் ஸ்டில் இணையத்தில் வைரலானது. சுழலில் மட்டும் சுழற்றி அடிக்க மாட்டேன் மட்டையையும் சுழற்றுவேன் சுழற்றி சுழற்றி அடித்தார். அதுவரை கம்பேனி இல்லாமல் தவித்த கோலியும் சேர்ந்தார். ஆடுவது ரோஹித்தும் பண்டுமா என்ற நினைக்கு அளவிற்கு இருவரும் வெளுத்து வாங்கினர்.

Image

இருப்பினும் இந்தக் கூட்டணி 202 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இதற்கு மேல் மேட்ச் நம்ம பக்கம் தான் என்று நினைத்த இங்கிலாந்தின் நம்பிக்கையில் மண்ணைத் தூவினார் அஸ்வின். என்ன வேணுனா நடக்கட்டுமே நான் சந்தோஷமா இருப்பேன் என்பது போல் ஜாலியாக அடி சதத்தையும் எடுத்தார். அவரின் விக்கெட்டோடு இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஆனால் இங்கிலாந்துக்கோ கதையே முடிந்தது.

Image

482 ரன்கள் என்ற மிக மிகக் கடினமான இலக்கோடு ஆடவந்த இங்கிலாந்துக்கு சோதனை மேல் சோதனையாக நேற்றே நான்கு விக்கெட்டுகள் சரசரவென சரிந்தன. சரிச்சது யாருனு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அஸ்வினும் அக்சரும் தான். இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடர்ந்தது. போட்டியை டிராவாவது செய்துவிட வேண்டும் என்ற வெறி கேப்டன் ரூட்டைத் தவிர யார் கண்களிலும் தெரிந்ததாகத் தெரியவில்லை. மீண்டும் மொய் வைத்துவிட்டுச் சென்றார்கள். ரூட் மட்டுமே ஆட்டத்தின் உயிர்நாடியைப் பிடித்து ஆடினார். யாரும் கம்பேனி கொடுக்காததால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரும் பெவியலனுக்குப் போய்விட்டார்.

Image

மொயின் அலி மட்டும் ஆறுதலுக்காக ஐந்து சிக்சர்களைப் பறக்கவிட்டு இங்கி. அடித்த முந்தைய 134 ரன்களை பீட் செய்ய உதவினார். அவரின் விக்கெட்டோடு இந்தியாவிடம் இங்கிலாந்து 164 ரன்களுக்குச் சரணடைந்தது. இந்த இன்னிங்ஸில் அக்சர் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றிபெற்றது. துண்டு ஒரு தடவ தான் கீழ விழும் மிஸ்டர் ரூட் என்று கோலி பாடம் கற்றுக்கொடுத்துவிட்டார். தமிழ் பட ஹீரோ போல முதல் போட்டியில் மிக மோசமாகத் தோற்றுவிட்டு, அடுத்தடுத்த போட்டிகளில் வெறிகொண்டு அடிப்பது இந்தியாவின் வாடிக்கையாகிவிட்டது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு இந்தியா முன்னேறியது.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews