பட்டாசாக வெடித்த பண்ட்… சரவெடியாக கொளுத்திய பாண்டியா – மிரண்டுபோன இங்கிலாந்து!

 

பட்டாசாக வெடித்த பண்ட்… சரவெடியாக கொளுத்திய பாண்டியா – மிரண்டுபோன இங்கிலாந்து!

முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி கொடுத்த பூஸ்டில் இந்திய அணி உற்சாகமாக இன்று களமிறங்கியது. மோர்கனுக்கு காயம் ஏற்பட்டதால் பட்லர் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பட்லரிடமாவது டாஸை வெல்வார் என்று பார்த்தால் வழக்கம் போல டாஸில் தோற்றார் கோலி. கடந்த போட்டியில் காயம் காரணமாக விலகிய ஸ்ரேயாஷுக்கு பதில் பண்ட் உள்ளே வந்தார். இங்கிலாந்து அணியில் மோர்கனுக்கு பதிலாக டேவிட் மாலன், சாம் பில்லிங்ஸுக்குப் பதிலாக லிவிங்ஸ்டோன், மார்க் உட்டுக்கு பதிலாக டாப்ளே ஆகியோர் உள்ளே வந்துள்ளனர். பட்லர் பவுலிங்கை தேர்வுசெய்ய இந்தியா பேட்டிங் செய்ய ஆரம்பித்தது.

Image

கடந்த முறை சிறப்பாக விளையாடிய தவான் இம்முறை 4 ரன்களில் வெளியேறினார். அவருக்குப் பின்னாலேயே ரோஹித்தும் நடையைக் கட்டினார். அதன்பின் கேப்டன் கோலியுடன் கேஎல் ராகுல் கைகோர்த்தார். இருவரும் பொறுப்பாக விளையாடி தேவைப்படும் நேரம் பவுண்டரிகளை விளாசினர். இருவரும் அரைசதத்தை எட்ட 66 ரன்களில் கோலி வெளியேறினார். ஒருவழியாக பார்ட்னர்ஷிப்பை பிரித்தாயிற்று என்று இங்கிலாந்து நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் சூறாவளி இறங்கிவிட்டது. திரும்பிய பக்கமெல்லாம் சிக்சர் அடித்து மிரட்டிவிட்டார் பண்ட்.

Image

கோலி இருந்தவரை சீராக உயர்ந்த ரன்கள் பண்ட் சூறாவளிக்குப் பின் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. ஒரு பக்கம் இவர் சுழன்றடிக்க ராகுல் சதமடித்த கையோடு 108 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். அதன்பின் பண்ட்டோடு பாண்டியா இணைய இருவரும் சூரசம்ஹாரம் செய்துவிட்டார்கள். பண்ட் 77 ரன்களில் வெளியேற தம்பி குருணால் பாண்டியா உள்ளே வந்தார். இறுதியில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்களைக் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் டாம் கரண், ரீஷ் தலா 2 விக்கெட்டுகளையும், சாம் கரண், அதில் ரஷித் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.