உங்க வங்கிக் கணக்கு 6 மாதம் செயல்படவில்லையா… ஓய்வூதியம் கிடைக்காதாம்… பதறவைக்கும் தமிழக அரசின் அறிவிப்பு

 

உங்க வங்கிக் கணக்கு 6 மாதம் செயல்படவில்லையா… ஓய்வூதியம் கிடைக்காதாம்… பதறவைக்கும் தமிழக அரசின் அறிவிப்பு

ஆறு மாதங்கள் செயல்படாத வங்கிக்கணக்குகளில் ஓய்வூதியம் செலுத்தப்பட மாட்டாது என்று தமிழக அரசு திடீரென அறிவித்துள்ளது. இதனால், ஓய்வூதியதாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையர் சி.சமயமூர்த்தி, அனைத்து கருவூல ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தமிழக கருவூல விதிகளின்படி, ஓய்வூதியர் ஒருவரின் வங்கி கணக்கு எந்தவித செயல்பாடுமின்றி (பணம் எடுக்காமல் இருப்பது) தொடர்ந்து 6 மாதங்களுக்கு இருந்தால், அதுபற்றி ஓய்வூதியம் வழங்கும் அதிகாரியிடம் அந்த வங்கி தெரிவிக்க வேண்டும். அந்த வங்கி கணக்கிற்கு ஓய்வூதியம் செலுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அந்த ஓய்வூதியர் தனது வாழ்நாள் சான்றிதழை காட்டும் வரை அல்லது நேரில் ஆஜராவது வரை அந்த கணக்கு நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும். அப்படி வராத நிலையில், எடுக்கப்படாத ஓய்வூதியத் தொகையை மட்டும் (சேவிங்ஸ்ல் இருக்கும் மற்ற தொகையை அல்ல) திருப்பிச் செலுத்திவிட வேண்டும். இதுதொடர்பாக வங்கிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி, தொடர்ந்து 6 மாதங்களாக செயல்பாடு இல்லாத கணக்குகளின் பட்டியலை தயார்படுத்த செய்ய வேண்டும். அந்த பட்டியலை வாங்கி, சம்பந்தப்பட்ட ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்வது குறித்து உறுதி செய்ய வேண்டும். எடுக்கப்படாத ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத் தொகையை வங்கிகளிடம் இருந்து பெற்று அதை அரசு கணக்கில் சேர்க்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கண்காணித்து தகுந்த ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் தலைவர் ரங்கராஜ், பொதுச் செயலாளர் மோகன் ஆகியோர் தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளரிடம் அளித்துள்ள மனுவில், “கருவூலங்கள் மற்றும் கணக்குகள் ஆணையரின் உத்தரவு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களின் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அரசு பிறப்பித்து வரும் ஆணைகளுக்கு கருவூல ஆணையர் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு பொருத்தமாக இல்லை. மகன் அல்லது மகள் வீட்டில் தங்கி இருக்கும் வயதானவர்கள், வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று கட்டாயப்படுத்தி உத்தரவிட்ட பிறகு அவர்கள் வங்கிகளுக்கு எப்படி வந்து கணக்கை பயன்படுத்த முடியும். பல ஓய்வூதியர்களுக்கு ‘ஆன்லைன்’ வசதிகள் இல்லை. வங்கிக் கணக்கை ஒருவர் பயன்படுத்தவில்லை என்றால் அவர் இறந்துவிட்டதாக கருதிவிடக் கூடாது. எனவே கருவூல ஆணையர் தனது உத்தரவை திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.