ரஜினி கதை தான் சசிகலா கதையும்- ஹெச். ராஜா

 

ரஜினி கதை தான் சசிகலா கதையும்- ஹெச். ராஜா

நடிகர் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு தான் அரசியலுக்கு வர இருப்பதாக ரஜினி அறிவித்தார். இதன்பிறகு அவரது பணிகளில் சுணக்கம் ஏற்பட, கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் அரசியல் பேச்சை ஆரம்பித்த அவர், ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என்று அறிவித்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக இருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

உடல்நலக்குறைவினால் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரஜினி சென்னைக்குத் திரும்பியதும் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் . ரஜினியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பலருக்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. தற்போது சசிகலாவின் அரசியல் வருகையை பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். சசிகலா அரசியலுக்கு வருவாரா? இல்லையா? அதிமுகவுடன் இணைவாரா? அதிமுக -அமமுக இணையுமா? அதிமுகவில் பிளவு ஏற்படுமா என்பதெல்லாம் விவாதமாகியுள்ளது.

ரஜினி கதை தான் சசிகலா கதையும்- ஹெச். ராஜா

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச் . ராஜா, “7 பேர் விடுதலை குறித்து நீதிமன்றம் முடிவெடுக்காமல் ஆளுநரிடம் விட்டுவிட்டது ஏற்புடையதல்ல. 7 பேர் விடுதலையில் திமுக ,காங்கிரஸ் கண்ணாமூச்சி ஆடுகிறது . ரஜினி அரசியலுக்கு வராதது போல சசிகலா வருவாரா? வர மாட்டாரா ? என்பதனை பொறுத்திருந்து பாருங்கள். இஸ்லாமிய பயங்கரவாதத்தை கண்டிக்கவும், கட்டுப்படுத்தவும், தமிழக காவல்துறைக்கு துப்பில்லை. காவல்துறை பாரபட்சமாக நடந்து கொண்டால் தமிழகத்தில் கலவர சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இந்துகள் மனதிலே வந்திடும்” எனக் கூறினார்.