வியர்க்குருவுக்கு தீர்வு தருமா பவுடர்?

 

வியர்க்குருவுக்கு தீர்வு தருமா பவுடர்?

கோடைக் காலத்தில் சருமத்தில் சின்ன சின்ன கொப்பளங்கள் போன்ற வியர்க்குரு வருகின்றது. பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்குத்தான் வியர்க்குரு பிரச்னை அதிகம் வருகிறது. அதிகப்படியான வியர்வை சுரக்கும்போது அதில் அடைப்புகள் ஏற்படுகின்றன. இது வியர்க்குரு வருவதற்கு காரணமாகிவிடுகிறது.

வியர்க்குருவுக்கு தீர்வு தருமா பவுடர்?

வியர்க்குரு பிரச்னை சரியாக பிரத்தியேக பவுடர்கள் விற்பனையாகின்றன. இந்த பவுடர்கள் வியர்க்குரு வதைத் தடுக்குமா என்றால் இல்லை என்பதே பதிலாக உள்ளது. இந்த பவுடர்கள் வியர்க்குரு வந்த இடங்களை குளிரவைக்கவும், வியர்க்குருவால் ஏற்பட்ட எரிச்சல் போகவும் உதவுகின்றன. வியர்க்குரு வராமல் காப்பது இல்லை.

வியர்க்குரு வராமல் தடுக்க அதிக வெப்பம், காற்றில் அதிக ஈரப்பதம் உள்ள பகுதிகளில் இருந்து சற்று குளிர்ந்த இடங்களுக்கு இடப்பெயர்வு செய்வது நல்லது. ஆனால், இது எல்லோருக்கும் சாத்தியமில்லை என்பதால், வியர்க்குருவை சமாளிக்க செய்ய வேண்டிய வழிகள் பற்றிக் காண்போம்.

வியர்க்குரு வந்தால் மருந்துக் கடைகளில் விற்பனையாகும் கேலமைன் லோஷன் வாங்கி தடவலாம். காலை, மாலை என இரண்டு வேளை குளிப்பது உள்ளிட்ட எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் வியர்க்குரு வருவதைத் தடுக்கலாம்.

வியர்க்குரு வராமல் தடுக்க, வெயிலில் வெளியே செல்லும்போது, மருத்துவ ஆலோசனைப்படி, சருமத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசர், சன் ஸ்க்ரீன் போட்டுக்கொள்ள வேண்டும்.

தினமும், கேரட், ஆரஞ்சு, வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வர வேண்டும்.

வியர்க்குரு பவுடரை பயன்படுத்துபவர்கள், குளித்ததும் சில நிமிடங்கள், நன்றாக உடலைத் துவட்டிய பிறகு, ஒரு ஸ்பாஞ்சில் சிறிய அளவு பவுடர் கொட்டி, வியர்க்குரு வரும் இடங்களான நெற்றி, முதுகு, மார்பு, அக்குள் பகுதிகளில் தடவ வேண்டும். வியர்க்குரு பவுடரை உடலில் அப்படியே கொட்டித் தடவுவதால், அதுவே வியர்வை சுரப்பியில் அடைப்பை ஏற்படுத்த காரணமாகிவிடும்.

வியர்க்குரு கட்டுக்கடங்காமல் வருகிறது, வலி அதிகமாக இருக்கிறது என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.