அடுக்கு மாடியில் எப்படி ஆடு, மாடு வளர்க்க முடியும்? திருநங்கைகளின் ஆதங்கம்

 

அடுக்கு மாடியில் எப்படி ஆடு, மாடு வளர்க்க முடியும்?  திருநங்கைகளின் ஆதங்கம்

அடுக்கு மாடி குடியிருப்பில் ஆடு, மாடு வளர்க்க முடியாது என்பதால் தனி வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார்கள் திருநங்கைகள்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்தில் வசிக்கும் 11 திருநங்கைகள் குழுவாக தர்மபுரி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் மலர்விழியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அடுக்கு மாடியில் எப்படி ஆடு, மாடு வளர்க்க முடியும்?  திருநங்கைகளின் ஆதங்கம்

அம்மனுவில், பாலக்கோடு பகுதியில் வசிக்கும் திருநங்கைகளின் நிம்மதியான வாழ்வுக்கு உதவும் வகையில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் மூலம் அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். இறுதியாக, பாலக்கோடு பகுதியில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் திருநங்கையருக்கு வீடுகள் வழங்கப்படும் என சமீபத்தில் பாலக்கோடு தாசில்தார் தெரிவித்து விட்டார்.

திருநங்கையரில் பலரும் பொருளாதாரம் ஈட்ட வசதியாக ஆடு, மாடு, கோழிகளை வளர்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அடுக்குமாடியில் வீடு கொடுத்து விட்டால் அங்கே எப்படி நாங்கள் ஆடு, மாடு வளர்க்க முடியும். இந்த காரணத்தால் எங்களுக்கு தனித்தனி மனைகளாக வழங்கி அதில் அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுத்து உதவிட வேண்டும். நகரத்தில் இருந்து சற்று தொலைவாக இருந்தாலும் கூட ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், தனி மனைகளாகத் தான் வேண்டும். மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் எங்களுக்கு கொடுப்பதாக தாசில்தார் கூறிய வீடுகளை வேறு பயனாளிகளுக்கு கொடுத்து உதவுங்கள்’’ என்ற கோரிக்கை இடம்பெற்றிருந்தது. 

அதிகாரிகளிடம் விசாரித்து பாலக்கோடு பகுதியில் அரசு நிலம் இருப்பதை பொறுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறி அனுப்பினார் கலெக்டர் மலர்விழி.