முதுமையில் எலும்புத் தேய்மானம்… தவிர்ப்பது எப்படி?

 

முதுமையில் எலும்புத் தேய்மானம்… தவிர்ப்பது எப்படி?

எலும்புத் தேய்மானம்… சமீபகாலமாக பலரையும் பயமுறுத்தி வரும் பாதிப்புகளில் ஒன்று. பெரும்பாலும் வயதானவர்களை மட்டுமே பாதித்து வந்த இந்த எலும்புத் தேய்மானம் இன்றைக்கு குறைந்த வயதினரையும் பாதிக்கிறது. மாறி வரும் உணவுப்பழக்கமும் அன்றாடச் செயல்பாடுகளுமே குறைந்த வயதினரைப் பாதிக்கக் காரணமாகும்.

முதுமையில் எலும்புத் தேய்மானம்… தவிர்ப்பது எப்படி?

40 வயதுக்குப் பிறகு…
`ஆஸ்டியோபோரோசிஸ்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இதை நோய் என்று சொல்வதைவிட குறைபாடு என்பதே சரியாக இருக்கும். வயது ஆக ஆக எலும்புகள் சேதமடைந்து ஒரு கட்டத்தில் தீவிரமாகி ஆளையே கொல்லுமளவுக்கு போய்விடுவதும் உண்டு.

பொதுவாக நாற்பது வயதைத் தொடும்போது மனித எலும்புகள் வலுவிழக்கத் தொடங்கும். இதைத்தான் எலும்புத் தேய்மானம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது பெரும்பாலும் பெண்களை அதிக பாதிப்புக்குள்ளாக்கி அவதிக்குள்ளாக்குகிறது. 40 வயதில் தொடங்கும் இந்தப் பாதிப்பு வயது அதிகரிக்க அதிகரிக்க தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

முதுமையில் எலும்புத் தேய்மானம்… தவிர்ப்பது எப்படி?கால்சியம் சத்து…
எலும்புகளுக்கு கால்சியம் சத்து தேவை. தாது உப்புகளில் ஒன்றான இந்த கால்சியத்தை நாம் உண்ணும் உணவுகளில் இருந்து எலும்புகளே எடுத்துக் கொள்ளும். ஆனால், முதுமையை நெருங்கும்போது இந்தச் செயல்பாடு மாற்றமடைவதுடன் முழுமையாக தடைபடவும் வாய்ப்பு உள்ளது. மெனோபாஸ் காலகட்டத்துக்குப் பிறகு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் எலும்புகளில் கால்சியம் உப்பைச் சேகரிக்கும் செயல்பாடுகள் குறைந்து எலும்புத் தேய்மானம் ஏற்படும்.

கால்சியம் சத்து சேகரிக்கும் பணி தடைபடுவதால் எலும்புகளில் தேய்மானம் ஏற்படும். இதனால் எலும்பு முறிவு, மூட்டுகளில் வலி, மூட்டு வாதம், கழுத்து எலும்பு மற்றும் முதுகெலும்புத் தேய்மானம், முதுகு வலி, உடல் சோர்வு, அசதி, முதுகெலும்பு வளைந்து கூன் விழுதல், நடையில் தளர்வு போன்றவை ஏற்படும். இந்தப் பாதிப்புகளை குணப்படுத்துவதைவிட மிக எளிதாகத் தடுக்கலாம்.

முதுமையில் எலும்புத் தேய்மானம்… தவிர்ப்பது எப்படி?உடற்பயிற்சி…
எலும்புகள் தேய்வதிலிருந்து தடுக்க தினமும் உடற்பயிற்சி செய்வது முக்கியத் தடுப்பு முறையாகும். ஆனால், சிலர் நடந்தால் வலி வந்துவிடும் என்ற பயத்தில் நடப்பதைத் தவிர்ப்பார்கள். அப்படிச் செய்வது நோயின் வீரியத்தை அதிகப்படுத்தும். குறைந்தது ஒரு மணிநேரமாவது நடைப்பயிற்சி செய்வது எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.

நடைப்பயிற்சியின்போது முறையான காலணிகள் அணிந்தால் முழங்காலில் ஏற்படும் வலி, வாதம் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
வயது முதிர்ந்தவர்கள் குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வேண்டும். தினமும் குறைந்தது 15 நிமிடமாவது சூரிய ஒளி உடலில் படுமாறு இருப்பது அவசியம். இதன்மூலம் எலும்புகளுக்குத் தேவையான வைட்டமின் டி தோல் மூலம் உறிஞ்சப்படும்.

தானியம், காய்கறி…
இதுமட்டுமல்லாமல் பால், கீரைகள், தானியங்கள் போன்ற கால்சியம் சத்து அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவும். பச்சைக் காய்கறிகளில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் காய்கறிகளைச் சாப்பிடலாம். சோயாவிலும் கால்சியம் உள்ளதால் அதை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அசைவம் சாப்பிடுபவர்கள் மீன் உணவுகளை உண்ண வேண்டும்.

காபி அதிகம் அருந்துவது கால்சியம் வெளியேறுவதை அதிகரிக்கும். மது அருந்துவது, புகைப்பிடித்தல் போன்றவை கால்சியம் அளவைக் குறைக்க வாய்ப்புள்ளது என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். மாத்திரை வடிவிலும் கால்சியம் கிடைக்கிறது. மருத்துவரின் ஆலோசனையின்பேரில் அவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

முதுமை என்பது தவிர்க்க முடியாதது. அதேபோல் ஹார்மோன் மாற்றங்களையும் தவிர்க்க முடியாது என்பதால் அவற்றை சரிசெய்து கொள்ள மேலே சொன்ன அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். இதன்மூலம் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம்.