லாக்டவுன் ஒரு தடையில்லை… அடையாளத்தைத் தக்கவைத்த ’பீனிக்ஸ்’ தமிழ்நாடு!

 

லாக்டவுன் ஒரு தடையில்லை… அடையாளத்தைத் தக்கவைத்த ’பீனிக்ஸ்’ தமிழ்நாடு!

கடந்த சில ஆண்டுகளாக தனியார் முதலீடுகளை ஈர்க்க தவறிய தமிழ்நாடு அரசு துரிதமாகச் செயல்பட்டு, சீர்திருத்தங்களை மேற்கொண்டு ’தொழில் தொடங்க உகந்த மிகச் சிறந்த மாநிலமாக’ தமிழ்நாட்டை மாற்றியிருக்கிறது. கொரோனா பேரிடர், லாக்டவுன் என பல்வேறு தடைகளைத் தாண்டி இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தை மீண்டும் தக்கவைத்திருக்கிறது தமிழ் ’நாடு’.

தொழில் வளர்ச்சியின் முக்கியத்துவம்

ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் தொழில் துறை வளர்ச்சி மிக முக்கியக் காரணியாக விளங்குகிறது. அதை விடுத்து மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.

தொழில் வளர்ச்சியால் அதிகப்படியான தொழிற்சாலைகள் உருவாகும். வேலைவாய்ப்புகள் அதிகரித்து மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். உற்பத்தி அதிகரிக்கும். மக்களிடம் காசு புழங்கும் பட்சத்தில் நுகர்வு அதிகரிக்கும். இவையனைத்தும் சங்கிலித்தொடர் போல ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை.

லாக்டவுன் ஒரு தடையில்லை… அடையாளத்தைத் தக்கவைத்த ’பீனிக்ஸ்’ தமிழ்நாடு!

தனியார் முதலீடுகளின் பங்கு

இத்தகைய தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதில்தான் மாநில அரசின் நிர்வாகத் திறமை மதிப்பிடப்படுகிறது. மாநிலத்தில் இருக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கேற்ப வேலைவாய்ப்புகளையும் அதற்கான தொழிற்சாலைகளையும் அரசால் உருவாக்க முடியுமா? இந்தக் கேள்விக்கான பதிலில் இருந்து தான் தனியார் முதலீடுகள் கவனம் பெறுகின்றன.

தனியார் முதலீடுகளை ஈர்ப்பதென்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. முதலீடுகளை ஈர்க்க ஒரு மாநில முதலமைச்சரே வெளிநாடு செல்ல வேண்டிய நிலையும் ஏற்படலாம். கடந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டிற்குப் பயணம் செய்தது நினைவிருக்கலாம்.

லாக்டவுன் ஒரு தடையில்லை… அடையாளத்தைத் தக்கவைத்த ’பீனிக்ஸ்’ தமிழ்நாடு!

முதலீடுகளை ஈர்க்க என்ன தேவை? ஏன் தமிழ்நாடு சறுக்கியது?

அதிகப்படியான முதலீடுகளை ஈர்க்க வேண்டுமென்றால் அதற்கான சூழலை உருவாக்க வேண்டும். சுற்றுச்சூழல் ஒப்புதல், கட்டடம் கட்ட அனுமதி, பத்திரப்பதிவை எளிமையாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சூழல்களை தனியார் துறையினருக்குச் சாதகாமாக்கிக் கொடுக்க வேண்டும்.

அவ்வாறு கொடுக்காததின் பலனைக் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு அனுபவித்தது. மேற்குறிப்பிட்ட சூழல்களைக் அடிப்படையாகக் கொண்டு 2017இல் மத்திய தொழில்கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை வெளியிட்ட ’தொழில் தொடங்க உகந்த சூழல் கொண்ட மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில்’ இந்தியா 18ஆம் இடத்தைப் பிடித்து மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது.

2018இல் 15ஆம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டாலும், அந்த வளர்ச்சி சிறப்பானதாகக் கருதப்படவில்லை. ஏனென்றால், தமிழ்நாட்டை விட தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்கள் டாப் 10இல் இடம்பிடித்திருந்தன.

லாக்டவுன் ஒரு தடையில்லை… அடையாளத்தைத் தக்கவைத்த ’பீனிக்ஸ்’ தமிழ்நாடு!

அரசின் கெடுபிடிகளால் பல தனியார் முதலீடுகள் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடாகாவிற்கு ஓட்டம் பிடித்தன. சொல்லப்போனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள் கூட அண்டை மாநிலங்களில் முதலீடு செய்தனர்.

விளைவாக அதிகப்படியான வேலைவாய்ப்பின்மை உருவாகியது. இதோடு சேர்ந்த கொரோனா பேரிடம் உருவாக வேலைவாய்ப்பின்மை சரசரவென உயர்ந்தது. கடந்த ஆண்டு தலைமைச் செயலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் வேலைக்கு பிஇ, எம்பிஏ பட்டதாரிகள் விண்ணப்பத்திருந்ததைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இது ஒரு சிறு உதாரணம் தான்.

காலம் தாழ்ந்து பொறுப்புணர்ந்த அரசு

நிலைமையின் தீவிரத்தை மிக தாமதமாக உணர்ந்த அரசு, கெடுபிடிகளைத் தளர்த்தி, சில சீர்திருத்தங்களை மேற்கொண்டு தனியார் முதலீடுகளை ஈர்க்க ஆவன செய்தது. அதில் ஒன்று தான் முதலமைச்சர் தலைமையிலான குழு அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் சென்று முதலீடுகளை ஈர்த்தது. இந்தப் பயணம் தொழிலதிபர்களின் நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்தது.

அதுமட்டுமில்லாமல், கொரோனாவை எதிர்கொள்ள தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியது, அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வசதியான ஒற்றைச் சாளர (single window) முறையை மிகச் சரியாக நடைமுறைப்படுத்தியது, அனுமதியில் சிக்கல் இருந்தால் முதலமைச்சரே நேரடியாகத் தலையிட்டு தீர்த்து வைப்பது போன்ற பல்வேறு சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டது.

நம்பர் 1 இடத்தைத் தக்கவைத்த தமிழ்நாடு

இவையனைத்தும் நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது. அதன் விளைவாகவே கொரோனா போன்ற நெருக்கடியான காலகட்டத்திலும் அதிகப்படியான தனியார் முதலீடுகளை ஈர்த்து 70க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அரசு கையெழுத்திட்டு சாதனை புரிந்துள்ளது. அகில இந்திய அளவில் தொழில் தொடங்குவதற்கான சிறந்த மாநிலம் என்ற பெயரை மீண்டும் தனக்கு உரித்தாக்கியுள்ளது தமிழ்நாடு.

பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களுடன் 80 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு சுமார் 66 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை அரசு ஈர்த்துள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

லாக்டவுன் ஒரு தடையில்லை… அடையாளத்தைத் தக்கவைத்த ’பீனிக்ஸ்’ தமிழ்நாடு!

CARE என்ற மதிப்பீட்டு நிறுவனம் இந்தியாவிலேயே தொழில் தொடங்குவதற்கான நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாகக் கூறும் முதலமைச்சர் பழனிசாமி, 2020-21 நிதியாண்டின் முதல் அரையாண்டில் 16 சதவீத அன்னிய முதலீடுகளைத் தமிழ்நாடு ஈர்த்திருப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

தனியாருடன் நெருக்கம் காட்டிய அரசு

தமிழ்நாடு அரசு எப்போதும் முதலீட்டாளர்களுடன் நட்புக் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்க விரும்புவதாக தமிழ்நாடு அரசு நிறுவனமான தொழில் வழிகாட்டுதல் குழுத் தலைவர் நீரஜ் மிட்டல் கூறியிருந்தது இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கது.

தனியார் முதலீடுகளை ஈர்க்கவும், கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் தலைமையில் உயர்நிலைக் குழுவை அரசு அமைத்தது.

லாக்டவுன் ஒரு தடையில்லை… அடையாளத்தைத் தக்கவைத்த ’பீனிக்ஸ்’ தமிழ்நாடு!

இந்தக் குழு வெளிநாடுகளிலிருந்து தங்கள் நிறுவனத்தை வேறு நாட்டிற்கு மாற்ற நினைக்கும் நிறுவனங்களைக் குறிவைத்து அவர்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான அறிவுரைகளை அரசுக்கு வழங்கிவருவது மிக முக்கியமான அம்சமாகும்.

உலகிலேயே மிகப் பெரிய தொழிற்சாலை தமிழ்நாட்டில்!

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சாரம், மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு ஆகிய துறைகளில் ஓலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள இக்குழு உதவியுள்ளது. இதன் மூலம் உலகிலேயே மிகப் பெரிய மின்சார இருசக்கர வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை ஓசூரில் அமையவிருக்கிறது.

லாக்டவுன் ஒரு தடையில்லை… அடையாளத்தைத் தக்கவைத்த ’பீனிக்ஸ்’ தமிழ்நாடு!

அதுமட்டுமில்லாமல், கிரவுன் நிறுவனக் குழுமம் விமானங்களின் உதிரிபாகங்கள், ட்ரோன் உள்ளிட்டவற்றைத் தயாரிக்க விண்வெளி பூங்கா ஒன்றை சேலத்தில் நிறுவ உள்ளது. இதற்காக 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதனால் 5 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகவிருக்கிறது. அமெரிக்க நிறுவனமான மைலான் ஆய்வகம் ஊசி தயாரிப்புப் பிரிவை கிருஷ்ணகிரியில் 350 கோடி ரூபாய் செலவில் அமைக்கவிருக்கிறது.

இதுகுறித்துப் பேசியுள்ள வென்ச்சர் ஆராய்ச்சி நிறுவனர் அருண் நடராஜன், ”மென்பொருள் உள்ளிட்ட துறைகளில் தனியார் முதலீட்டாளர்களின் வளர்ச்சி அதிகரித்திருப்பதால், தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் பயனடைந்துள்ளன” என்கிறார்.

சிறு, குறு தொழில்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது அரசு?

கடந்த 20 மாதங்களில் 100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது ஒருபுறம் இருந்தாலும், கொரோனா லாக்டவுனால் தமிழ்நாட்டிலுள்ள சிறு, குறு தொழில்கள் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்த லாக்டவுனில் கிட்டத்தட்ட 35 சதவீத தொழில்கள் நசிந்துள்ளதாகவும், இது 2020இல் நிகழந்த பேரழிவு என்றும் இந்திய சிறு, குறு வர்த்தக சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன் கவலை தெரிவிக்கிறார்.

இந்த விவகாரத்தின் அடிப்படையில் கடந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் அதிமுகவின் தொழில் வளர்ச்சி மேம்பாடு குறித்த விமர்சனத்தை எதிர்க்கட்சியான திமுக முன்வைக்கிறது.

லாக்டவுன் ஒரு தடையில்லை… அடையாளத்தைத் தக்கவைத்த ’பீனிக்ஸ்’ தமிழ்நாடு!

”பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமல் ஆகியவற்றிற்குப் பின் சுமார் 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. இதனை மீட்டெடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

ஆனால் இன்னும் அரசு வெளியிடவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதில் தோல்வியுற்றது வெளிப்படையாகவே தெரிகிறது” என்று கனிமொழி எம்பி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

விமர்சனங்களுக்கான பதில் என்ன?

இந்த விமர்சனங்களைப் பகிரங்கமாக மறுக்கும் அரசு, கடந்த 10 ஆண்டுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முழுமையான திட்டங்களாக மாற்றப்படும் விகிதம் 82.4 சதவீதமாக இருப்பதாகக் கூறியுள்ளது. 2019ஆம் ஆண்டு வரை கையெழுத்திட்ட 500 ஒப்பந்தங்களில் 412 ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்து உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்தது.

2015 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த மாற்ற விகிதம் 72 சதவீதமாக இருந்தது; இதுவே 2019 நடைபெற்ற மாநாட்டில் இந்த விகிதம் 89 சதவீதமாக அதிகரித்தது என்றும் கூறியது. அதேபோல, தொழிற்சாலைகளை இயக்குவதற்கான ஒப்புதலை (Consent to Operate) தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 26 ஆயிரத்து 309 ஒப்புதல்களை வழங்கியுள்ளது. இவ்வாறு அரசு தனது தரப்பை எடுத்துரைத்திருக்கிறது.

பீனிக்ஸ் பறவையான தமிழ்நாடு

இந்தத் தசாப்தத்தில் தொழில் துறை வளர்ச்சியில் முன்னணி மாநிலமாகத் தக்கவைத்துக் கொள்ளவும், அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாட்டிற்கு அதிக வாய்ப்பிருப்பதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI) அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவின் முன்னோடி மாநிலம் என்ற பெயர் பெற்ற தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் ஆங்காங்கே சறுக்கியிருந்தாலும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறது. கொரோனா போன்ற நெருக்கடியான காலகட்டத்திலும் தனது அடையாளத்தை மீட்டெடுத்தது சிறப்பு!