தினமும் முட்டை சாப்பிடுவது நல்லதா?

 

தினமும் முட்டை சாப்பிடுவது நல்லதா?

முட்டை மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு. கொழுப்புச்சத்து நிறைந்த உணவும் கூட. ஒரு செல்லிலிருந்து முழு கோழிக் குஞ்சாக வளர்ச்சி அடைய தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் ஒரு முட்டையில் அடங்கியுள்ளது என்றால் அதன் மதிப்பை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

தினமும் முட்டை சாப்பிடுவது நல்லதா?

முட்டையில் உள்ள அதிக கொழுப்பு சத்து காரணமாக விரைவில் மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் வரலாம் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. உண்மையில் முட்டையில் இருந்து கிடைக்கும் கொழுப்புச் சத்து நம்முடைய உடலுக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. கொழுப்புச்சத்து நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு செல் உள் கட்டமைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் டெஸ்டோஸ்டீரான், ஈஸ்ட்ரோஜென், கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் உருவாகவும் அவசியமாக தேவைப்படுகிறது. நம்முடைய உடல் இயக்கத்துக்கு கொழுப்பு அவசியம் என்றாலும் நம்முடைய உணவில் மட்டுமின்றி நம்முடைய கல்லீரல் கூட கொழுப்பை உற்பத்தி செய்கிறது என்பதை உணர்ந்துகொள்வது அவசியம். எனவே, அதிகப்படியான கொழுப்பு கிடைப்பதைத் தவிர்க்க உணவு விஷயத்தில் கவனம் தேவை.

முட்டை சாப்பிடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும், குறைந்தபட்சம் முட்டையின் மஞ்சள் கருவையாவது தவிர்க்க வேண்டும் என்று பல காலமாக பலரும் கூறி வருகின்றனர். ஒரு முட்டையில் 186 மை.கி அளவுக்கு கொலஸ்டிரால் உள்ளது. இது ஒரு நாள் தேவையில் 62 சதவிகிதம் ஆகும். முட்டையின் வெள்ளைப் பகுதியானது புரதத்சத்து நிறைந்தது. அதில் கொழுப்பு மிகவும் குறைவு. எனவே, ஆரோக்கியமான நபர் ஒருவர் அதிகபட்சமாக வாரத்துக்கு 2 முதல் 6 முட்டை எடுத்துக்கொள்வது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

முட்டை சாப்பிடுவதற்கும் இதய நோய்க்கும் உள்ள தொடர்பு தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. உணவுப் பழக்கம், புகைப் பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்றவை இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. மற்றபடி முட்டை சாப்பிடுபவர்களுக்கு எந்த அளவுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதோ, அதே அளவில்தான் முட்டை சாப்பிடாதவர்களுக்கும் உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர். அதே நேரத்தில் டைப் 2 சர்க்கரை நோயாளிகள் அதிக அளவில் முட்டை சாப்பிட்டால் அவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் வாரத்துக்கு 2 – 3 முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம்.

தினமும் முட்டை சாப்பிடுவதால் பிரச்னை இல்லை. ஆனால், ஒரு நாளைக்கு மூன்றுக்கு மேல் எடுத்துக்கொள்ள வேண்டாம். அதிக அளவில் எடுக்கும்போது அது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.