பொடுகு பிரச்னைக்கு வீட்டிலேயே தீர்வு!

 

பொடுகு பிரச்னைக்கு வீட்டிலேயே தீர்வு!

பொடுகு பிரச்னை என்பது கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் அனுபவிக்கும் பிரச்னைதான். இதனால் மிகப்பெரிய ஆபத்து இல்லை என்றாலும் அதனால் ஏற்படும் அசௌகரியம் மிகப் பெரியது. தலையில் இருந்து செதில் செதிலாக வெள்ளை நிறத்தில் பொடுகு கொட்டுவது பல அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது.

பொடுகு பிரச்னைக்கு வீட்டிலேயே தீர்வு!

எண்ணெய் பிசுக்கான தலை, தலைக்கு சரியான ஷாம்பு அல்லது சிகைக்காய் போட்டு குளிக்காமை, சில வகையான பூஞ்சைத் தொற்று, உலர் சருமம், சென்சிடிவ் சருமம் போன்ற காரணங்களால் பொடுகு பிரச்னை ஏற்படுகிறது. ஆண், பெண் என இருபாலருக்கும் இந்த பிரச்னை வரலாம். இருப்பினும் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கே இந்த பிரச்னை அதிகம் ஏற்படுகிறது.

பொடுகு பிரச்னை விலக, மைல்ட் ஷாம்பு போட்டு அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் பொடுகு ஏற்படுவது தடுக்கப்படும்.

டீ ட்ரீ ஆயில் தலையில் தேய்த்து வந்தால் பொடுகு பிரச்னை விலகும். தொடர்ந்து நான்கு வாரங்கள் தொடர்ந்து டீ ட்ரீ ஆயிலை தடவி வந்தால் பொடுகு பிரச்னை மிகப்பெரிய அளவில் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் தலையில் அரிப்பு ஏற்படுவதும் குறைகிறது.

தலைக்கு ஷாம்பு போட்டு குளித்து பொடுகை நீக்க வேண்டும். தலை நன்கு காய்ந்ததும் தேங்காய் எண்ணெய் தடவி வர வேண்டும். இது பொடுகு பிரச்னை வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். அதே நேரத்தில் அதிக அளவில் எண்ணெய் தடவ வேண்டாம். இதன் காரணமாக எண்ணெய் பிசுக்கு ஏற்படலாம்.

கற்றாழையை வெட்டி அதன் ஜெல்லை தலையில் தடவி ஊற வைத்து தலைக்கு குளித்து வந்தால் பொடுகு பிரச்னை மறையும்.

தேங்காய் எண்ணெய்யுடன் வேப்ப எண்ணெய் சம அளவில் கலந்து தலையில் தடவி மசாஜ் செய்து ஊற விட வேண்டும். பிறகு மைல்ட் ஷாம்பு போட்டு குளித்து வந்தால் பொடுகு மறையும்.

வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தலையில் தடவிக் குளித்து வந்தால் பொடுகு பிரச்னை நீங்கும். உடல் வெப்பம் நீங்கும்.

மன அழுத்தம், உணவு முறை போன்றவை கூட பொடுகு பிரச்னை ஏற்படக் காரணமாக இருக்கின்றன. எனவே, மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க முயல வேண்டும்.

உணவில் துத்தநாகம், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைவாக இருக்கும் வகையில் சாப்பிட வேண்டும். போதுமான அளவில் தண்ணீர் அருந்த வேண்டும்.

பொடுகு பிரச்னை உள்ளவர்கள் வெளியே செல்லும்போது தலையை தொப்பி அல்லது துணி கொண்டு மூடிய படி செல்ல வேண்டும். அடிக்கடி வெளியே செல்பவர்கள் என்றால் தினமும் தலைக்கு மைல்ட் ஷாம்பு போட்டு குளிக்கலாம். மருத்துவர் பரிந்துரை இன்றி ஆன்டி டிரான்ட்ரஃப் ஷாம்பு அதிக அளவில் பயன்படுத்த வேண்டாம்!