நெஞ்சு சளியைக் கரைக்கும் தேங்காய் எண்ணெய் – கற்பூரம்!

 

நெஞ்சு சளியைக் கரைக்கும் தேங்காய் எண்ணெய் – கற்பூரம்!

சளிக்குக் கூட மருத்துவ உதவியை நாடும் அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. வீட்டு மருத்துவம், பாட்டி வைத்தியம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய்க் கொண்டே இருக்கிறது. குழந்தைக்கு சளி ஏற்பட்டு இரவு தூங்க முடியாமல் இருமல் வந்தால் என்ன செய்வது என்று இளம் தாய்மார்கள் யாருக்கும் தெரிவதில்லை.

சளி பிரச்னையை எதிர்கொள்ள அந்தக் காலத்தில் வீட்டில் பின்பற்றப்பட்டு வந்த சில வழிமுறைகளை இங்கே காண்போம்.

நெஞ்சு சளியைக் கரைக்கும் தேங்காய் எண்ணெய் – கற்பூரம்!

உப்பு நீரில் வாய் கொப்பளித்தல்

சளி பிரச்னை வந்தால் அதனுடன் தொண்டை வலி, இருமல் பிரச்னையும் வந்துவிடும். எனவே, வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொண்டையில் ஏற்பட்ட வீக்கம் குறையும், தொண்டை கமறல் அல்லது உறுத்தல் நீங்கும், சளி பிரச்னை குறையும்.

சளி பிரச்னை வந்துவிட்டாலே வெந்நீருக்கு மாறிவிடுவது நல்லது. வெந்நீர் தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைப் போக்கும்.

தேங்காய் எண்ணெய் கற்பூரம்

அந்த காலத்தில் சளி முதல் சருமப் பிரச்னை வரை அனைத்துக்கும் தேங்காய் எண்ணெய் கற்பூரத்தைப் பயன்படுத்துவார்கள். இதுவும் சளியைக் கரைக்கச் சிறந்த முறையாகும். இதற்கு வேண்டியது எல்லாம் தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் சிறிதளவு. ஒரு சின்ன கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் சிறிதளவு ஊற்றி, அதில் கற்பூரத்தைப் போட்டுக் காய்க்க வேண்டும். கற்பூரம் தேங்காய் எண்ணெய்யில் நன்கு கலந்ததும் ஒரு சில நிமிடங்களிலேயே அடுப்பை அணைத்துவிடலாம்.

எண்ணெய்யை தொடும் அளவுக்கு சூடு குறைந்ததும் அந்த எண்ணெய்யை நெஞ்சு, முதுகு, நெற்றி, தொண்டை பகுதியில் நன்கு தேய்க்க வேண்டும். பாதங்களிலும் தேய்ப்பது நல்லது. காலை, மாலை என ஒரு வாரத்துக்கு தொடர்ந்து இப்படி செய்து வந்தால் நெஞ்சு சலி காணாமல் போகும்.

இருமல் பிரச்னைக்கு…

வீட்டிலேயே தரமான ஆற்றல் மிக்க சிரப் செய்யலாம். இதற்கு தேவையானது எல்லாம் மிளகு மற்றும் தேன். ஒன்பது முழு மிளகை எடுத்து நன்கு இடித்துக்கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, மிளகை போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் பாதியாக வற்றியதும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். இந்த மிளகு நீரில் தேன் கலந்து சாப்பிட இருமல் காணாமல் போய்விடும். தினமும் காலை, மாலை என ஒரு வாரத்துக்கு கொடுத்து வந்தால் சளி இருமல் தொந்தரவு உங்களை நெருங்காது.