ஆரோக்கியம் தரும் பழைய சோறு!

 

ஆரோக்கியம் தரும் பழைய சோறு!

`கழனியை நிறைத்த சோறு…
களைத்தவருக்கு பிடித்த சோறு…
உழைத்தவர் எல்லாம் உண்ணும் சோறு…’ – பழைய சோறு பற்றி இப்படியொரு கவிதையை பார்க்க நேர்ந்தது என்று பழைய சோற்றின் மகிமைகள் குறித்துப் பேசினார் மூலிகை ஆராய்ச்சியாளர் தமிழ்க்குமரன்.

ஆரோக்கியம் தரும் பழைய சோறு!
பழைய சோறு:
“நம் பாட்டனும், பூட்டனும், ஆச்சியும், பாட்டியும் வயல் வேலைகளுக்குச் செல்லும்போது தூக்குச் சட்டியில் வெறும் பழைய சோத்தையும் கொஞ்சம் பச்சைமிளகாய், சின்ன வெங்காயத்தையும் கட்டிக்கொண்டு சென்றார்கள். சுட்டெரிக்கும் வெயிலில் நாள்முழுக்க உழைக்கும் அவர்களுக்கு இந்த பழைய சோறுதான் வலிமை தந்தது. பழைய சோற்றுக்கு கூடுதல் மகத்துவம் சேர்ப்பது முதல் நாள் மிஞ்சிய சோற்றில் ஊற்றி வைக்கப்பட்ட நீருடன் கலந்து நொதித்து மறுநாள் கிடைக்கும் நீராகாரம். நிசி நீர், சோற்று நீர், நீத்தண்ணீர், அன்னக்காடி, அன்ன அமுது, பழந்தண்ணி, கஞ்சித்தண்ணி என வேறு சில பெயர்களில் அழைக்கப்படும் இந்த நீராகாரம் பல்வேறு நலனைப் பெற்றுத் தரும்.

பழைய சோறு பற்றிய வரலாறு மிகச் சாதாரணமானது. ஏழை எளிய மக்கள், விவசாயிகள், சாமானிய மக்கள் முதல் நாள் சமைத்த உணவில் மீதமானது கெட்டுப்போகாமலிருக்க நீர் ஊற்றி வைத்தார்கள். அதை மறுநாள் காலை, மதியம் வரைகூட உணவாகப் பயன்படுத்தினார்கள். எளிய மக்களின் மிகச் சாதாரண நிகழ்வு இன்றைக்கு ஒரு வரலாறாகி உலகம் போற்றுமளவு உயர்ந்து நிற்கிறது.

ஆரோக்கியம் தரும் பழைய சோறு!
மண்பானை:
`காலைச் சிற்றுண்டியாக பழைய சோறு சாப்பிடுவதால் உடல் லேசாகி சுறுசுறுப்படையும். இரவில் நீர் ஊற்றி மூடிவைப்பதால் அதில் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உருவாகின்றன’ என்று சொல்லியிருக்கிறார் அமெரிக்க விஞ்ஞானி ஒருவர்.

அரிசியில் தயாரித்து பழைய சோறு மட்டுமல்ல கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியங்களிலும் சுவையான பழங்கஞ்சிகளைத் தயாரிக்கலாம். சிறுதானியங்களை இடித்து மாவாக்கி காலையில் ஊற வைத்து மாலையில் நீர் விட்டுக் கரைத்து உப்பு சேர்த்துக் காய்ச்சுவார்கள். முதல்நாள் காய்ச்சி வைத்த மாவை மறுநாள் காலை எடுத்து தண்ணீர் அல்லது மோர் சேர்த்துக் கரைத்து துவையல், ஊறுகாய், மோர் வற்றல், சுட்ட கருவாடு சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும். கோடை காலத்தில் ஆற வைத்தும் குளிர்காலத்தில் சூடாகவும் சாப்பிடலாம். மண்பானையில் செய்து வைத்துக் கொண்டால் நான்கு நாள் வரை கூட இதைப் பயன்படுத்தலாம்.

ஆரோக்கியம்:
பழைய சோறு சாப்பிட்டதால் நம் முன்னோர் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால், இன்றைக்குக் கிடைக்கும் தீட்டிய அரிசியில் பழைய சோறு செய்து சாப்பிட்டால் நிச்சயம் நோய் வரும். கைக்குத்தல் அரிசியில் பழைய சோறு செய்து சாப்பிடுவது நலம் பயக்கும். பழைய சோற்றுடன் சிலர் தயிர் ஊற்றிச் சாப்பிடுவார்கள். அது அவ்வளவு நல்லதல்ல; தயிரை மோராக்கி அதன்பிறகு பழைய சோற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

மோர் சேர்த்த பழைய சாதம் செரிமானக் கோளாறுகளைப் போக்கி வாதம், பித்தத்தைத் தணிக்கும். இன்னும் பல சிறப்புகளைக் கொண்ட பழைய சோறு இன்றைக்கு `மார்னிங் ரைஸ் ட்ரிங்’ என்ற பெயரில் டப்பாக்களிலும், பாட்டில்களிலும் அடைத்து ஒரு லிட்டர் 250 ரூபாய் என வெளிநாடுகளில் விற்கிறார்கள்.

ஆரோக்கியம் தரும் பழைய சோறு!

பழைய சோற்றின் மகத்துவம் அறிந்து அங்கே பெரிய வணிகமே நடக்கிறது. ஆனால், நம் ஊரில் பழைய சோறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும், சளி பிடிக்கும், ஊளைச் சதை போடும் என்று ஏதேதோ சொல்லி நம்மை மூளைச்சலவை செய்து ஓட்ஸ், கெலாக்ஸ் என எதையெல்லாமோ சாப்பிட வற்புறுத்துகிறார்கள்.

இரும்புச்சத்து, வைட்டமின் பி 6 மற்றும் பி 12, நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த பழைய சோற்றைச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்; மந்தநிலை விலகி சுறுசுறுப்பு கிடைக்கும்; உடல் சூடு தணியும்; வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கப்படும்; ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்; மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும்; அலர்ஜி விலகும்; செரிமான சக்தி அதிகரிக்கும்; உடல் வனப்பு பெறும்; உடல் வலி நீங்கும். இந்த உண்மை நமக்கெல்லாம் தெரிந்ததுதான் என்றாலும் அமெரிக்கன் நியூட்ரீஷன் அசோசியேஷனும் இதை உறுதிபடுத்தியிருக்கிறது. இதனால் பழைய சோறு உலகப்புகழ் பெற்றிருக்கிறது”.
பழைய சோறு நல்லதொரு உணவாகப் பயன்படுவதுடன் வருவாயையும் ஈட்டித்தரும்.