கொரோனா தடுப்பூசியை முதலில் போட்டுக்கொள்ள தயார்- சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

 

கொரோனா தடுப்பூசியை முதலில் போட்டுக்கொள்ள தயார்- சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இன்னும் கூட ஓய்ந்த பாடில்லை. ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியுள்ள கொரோனா தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. ஆனாலும் கொரோனாவுக்கு எதிரான போரில் அதை தடுப்பதற்கான எந்த தடுப்பூசியும் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை. அதற்கான பணிகளில் உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், “இந்தியாவில் பல தடுப்பூசி சோதனைகள் நடைபெற்றுவருகின்றன. சோதனைகள் முடிவடைந்த அடுத்த நிமிடமே, தாமதமின்றி தடுப்பூசி உற்பத்தி பணிகள் தொடங்கிவிடும். தடுப்பூசி தயாரானால் முதலில் அது மிகவும் தேவைப்படுபவர்களுக்கு கிடைக்கும்.

2021 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் கொரோனா தடுப்பூசி தயாராகி அறிமுகப்படுத்தப்பட்டுவிடும். தடுப்பூசி மருந்துகளை தனி மனிதர்களிடம் சோதனை நடத்துவதில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை குறைபாடு ஏற்பட்டால், முதல் தடுப்பூசியை நான் மகிழ்ச்சியுடன் போட்டுக் கொள்வேன். தடுப்பூசியின் பாதுகாப்பு , செலவு, தேவை, உற்பத்திக்கான காலக்கெடு போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டுவருகிறது” எனக் கூறினார்.