தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வு கோரிக்கையை அரசு உடனே நிராகரிக்க வேண்டும்! – ஜி.கே.வாசன் அறிக்கை

 

தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வு கோரிக்கையை அரசு உடனே நிராகரிக்க வேண்டும்! – ஜி.கே.வாசன் அறிக்கை

நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கின்ற இவ்வேளையில் தனியார் பள்ளிகளின் நிர்வாகங்கள் கல்விக்கட்டணத்தை வசூல் செய்வது குறித்தும், உயர்த்துவது குறித்தும் நினைப்பது ஏற்புடையதல்ல. தமிழக அரசு இந்த கோரிக்கையை உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வு கோரிக்கையை அரசு உடனே நிராகரிக்க வேண்டும்! – ஜி.கே.வாசன் அறிக்கை


இது தொடர்பாக ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கொரோனா  பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு இருப்பதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரும் பல விதங்களில் பாதிக்கப்படுகின்றனர். முக்கியமாக, அரசு மற்றும் தனியார் சார்ந்த அனைத்துப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களின் கற்றல் பணியும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் முடங்கிவிட்டதால் மாணவர்களின் கற்றலில் தடை ஏற்பட்டுள்ளது. இத்தடையால் கல்வித்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, தனியார் பள்ளி, கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை கேட்டு நிர்பந்திக்கக் கூடாது என தமிழக அரசு ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்தது.
அந்த வகையில், பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்புக்கு ஏற்ப செயல்பட வேண்டியது அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். காரணம், நோய் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்திலும், மாணவர்கள் நோயினால் மட்டுமல்ல கற்றலிலும் பாதித்துவிடக்கூடாது என்ற அடிப்படையிலும் தான் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தனியார் பள்ளிகளின் நிர்வாகங்கள் கல்விக்கட்டணத்தை வசூல் செய்வது குறித்தும், உயர்த்துவது குறித்தும் நினைப்பதே ஏற்புடையதல்ல. அது மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கின்ற இவ்வேளையில் பொருளாதார பாதிப்பை ஓரளவுக்கு தாங்கிக்கொள்ள தனியார் பள்ளிகளும் முன்வர வேண்டும்.
அதை விடுத்து, தமிழ்நாடு நர்சரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பது நியாயமில்லை. ஏனென்றால், பெற்றோர்கள் குடும்பம் நடத்துவதற்கே தேவையான பொருளாதாரம் ஈட்ட முடியாமல் சிரமப்படுகின்ற போது கல்விக்கட்டணம் செலுத்தவே முடியாத சூழலில் எப்படி கட்டணத்தை உயர்த்தி கட்ட முடியும். எனவே, தனியார் பள்ளிகளின் நிர்வாகங்கள், மாணவர்களின் கல்விக்கட்டணத்தை உயர்த்தக்கூடாது.
மேலும், தமிழக அரசும் தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண உயர்வு சம்பந்தமான கோரிக்கையை நிராகரித்து மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்க உடனடி அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.