அரசுக்கு தர்மசங்கடம்… பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திய மத்திய சுகாதாரத் துறை!

 

அரசுக்கு தர்மசங்கடம்… பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திய மத்திய சுகாதாரத் துறை!

கொரோனா நிலவரம் தொடர்பாக தினசரி செய்தியாளர் சந்திப்பு நடந்து வந்ததை நிறுத்தி மத்திய அரசு, வாரத்துக்கு ஒரு முறை சந்திப்பை நடத்த முடிவு செய்துள்ளது.

கொரோனா இந்தியாவில் வேகமாக பரவத் தொடங்கியதும் மத்திய அரசின் சுகாதாரத் துறை தினசரி செய்தியாளர் சந்திப்பை நடத்தி கொரோனா நிலவரம் தொடர்பான தகவலை வழங்கி வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லால் அகர்வால் பத்திரிகையாளர்களை சந்தித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக இந்த சந்திப்பு நடைபெறுவது இல்லை. ஏப்ரல் மாதம் இறுதியிலேயே ஐ.சி.எம்.ஆர் தரப்பு நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொள்வதை நிறுத்தினர்.

மத்திய அரசு தினசரி பத்திரிகையாளர் சந்திப்பை ஏன் நிறுத்தியது என்று தற்போது செய்தி வெளியாகி உள்ளது. நிருபர்களுடனான சந்திப்பின்போது பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அரசு தரும் விளக்கம் போதுமானதாக இல்லை. சில விளக்கங்கள் தவறாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சமூக பரவல் இல்லை என்று கூறினாலும் பல இடங்களில் அப்படி தொற்று பரவியதாக செய்திகள் வெளியாகின. கொரோனா தொற்று குறையும் என்று கூறி வந்த நிலையில் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது… இதனால், மத்திய அரசுக்கு தேவையில்லாத தர்மசங்கடம் ஏற்பட்டது. இதனால், பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்த மத்திய அரசு உத்தரவிட்டதாக சுகாதாரத் துறை உயர் அதிகாரி கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.