கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் 100 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ரத்தினபுரி பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக்(42). இவர் நெய் வியாபாரியாம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கார்த்திக் குடும்பத்துடன், உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில், இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து நகையை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆக்கியுள்ளனர்.

வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம் பக்கத்தினர் கார்த்திக்கிற்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில், கார்த்திக் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் அவரது வீட்டுக்கு சென்ற போலீசார், வீட்டில் இருந்து கைரேகைகளை சேகரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கும் பதியப்பட்டுள்ளது. போலீசார் கார்த்திக்கிடம் செல்போன் வயலாக விசாரித்ததில் வீட்டில், 100 சவரன் தங்க நகைகள் இருந்ததாக தெரிவித்துள்ளார். அவர் ஊரில் இருந்து திரும்பிய பிறகே முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.