கோபம், பதற்றம் போக்கும் மலர் மருந்துகள்!

 

கோபம், பதற்றம் போக்கும் மலர் மருந்துகள்!

மலர் மருத்துவம்… இந்த மருத்துவம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் நம்மில் பலர் அந்த மருத்துவத்தில் சிகிச்சை எடுத்திருக்க மாட்டோம். நம் ஊரில் உள்ள செம்பருத்தி, ஆவாரம்பூ, தும்பை போன்ற பூக்களைப்போல இங்கிலாந்தில் உள்ள காடுகளில் காணப்படும் பூக்கள் மற்றும் இலைகளிலிருந்து தயாரிக்கப்படுபவையே இந்த மலர் மருத்துவம். இந்த மருத்துவம் குறித்து நம்மிடம் பேசுகிறார் மருத்துவர் கௌரி தாமோதரன்.

கோபம், பதற்றம் போக்கும் மலர் மருந்துகள்!

பூக்கள், இலைகள்:
மலர் மருத்துவமும் நம் ஊரில் உள்ள பாரம்பரிய மருத்துவம் போன்றதே. ஆங்கிலத்தில் இந்த மருத்துவத்தை `பாச் ஃப்ளவர் ரெமடிஸ்’ (Bach Flower Remedies) என்பார்கள். ஹோமியோபதி மருத்துவத்தின் சகோதர மருத்துவமான இந்த மலர் மருத்துவத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் எட்வர்டு பாட்ச் என்பவர் கண்டுபிடித்தார். ஆங்கில மருத்துவரான இவர் ஹோமியோபதி மருத்துவத்தைப் பின்பற்றி வந்தபோது, மனம்தான் நோய்களுக்கு மூல காரணம் என்பதை அறிந்தார்.

மனதை சரிசெய்தால் உடலில் உள்ள நோய்கள் குணமடையும் என்பதை உணர்ந்து, காடுகளில் சென்று மலர்கள் மற்றும் இலைகளைப் பரிசோதித்தார். குறிப்பாக, புலர்ந்த காலைப்பொழுதில் பனித்துளிகளுடன் காணப்படும் மலர்களுக்கு உள்ள சக்தி அதிகம் என்பதை அவரது ஆராய்ச்சியில் கண்டுபிடித்தார். அந்த மலர்களை மட்டுமல்ல, அவற்றை மருந்தாக்கி தானே உண்டு சுயபரிசோதனை செய்து பார்த்தார். அத்துடன் வேறு சிலருக்கும் அவற்றைக் கொடுத்துப் பார்த்ததில் பலன்கள் கிடைக்கவே 1930-ம் ஆண்டில் அந்த மருந்துகளை ஒழுங்குபடுத்தினார். அவரது கண்டுபிடிப்பில் மொத்தம் 38 மலர்களின் மருந்துகள் முழுமை பெற்றன.

கோபம், பதற்றம் போக்கும் மலர் மருந்துகள்!

கோபம், பதற்றம்:
மலர்களின் சாறுகளிலிருந்து எடுக்கப்படும் இந்த மலர் மருந்துகள் உணர்ச்சி சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கக்கூடியது என்பது சுவையான செய்தி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பயம், கோபம், பதற்றம், தனிமை உணர்வு, அதீத சிந்தனை, தோல்வி மனப்பான்மை போன்றவை ஆட்கொண்டு அவர்களது செயல்பாட்டில் தடையை ஏற்படுத்திவிடும். இன்றைக்கு பல குழந்தைகள் தங்களது எதிர்காலத்தை தொலைத்து நிற்க இவை காரணமாக இருக்கின்றன. அவை அனைத்துக்கும் நல்ல தீர்வு தரக்கூடியது மலர் மருந்துகள்.

சின்னஞ்சிறு குழந்தைகள் முதலில் சிலநாட்கள் பள்ளி செல்ல பயப்படுவார்கள். இதுநாள்வரை தாயின் அரவணைப்பிலும் கதகதப்பிலும் வளர்ந்து வந்த அந்தக் குழந்தையால் தாயைப் பிரிந்து புதிய சூழலில் சில நிமிடங்கள்கூட இருக்கமுடியாது. மேலும் அங்கே அந்தக்குழந்தையின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ள அங்கே தகுந்த ஆள் இருக்காது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் அந்தக் குழந்தையின் மனதில் பள்ளிக்கூடம் என்றாலே ஒருவித பயம், அச்சம் ஏற்படும். இதனால் பள்ளிசெல்லும் நேரங்களில் அழுது அடம் பிடிப்பார்கள். நேரடியாகவே இது மனம் சார்ந்த பிரச்சினையாக இருப்பதால் இதற்கு மலர் மருந்துகளைக் கொடுக்கும்போது குழந்தைகளிடம் நல்ல மாற்றம் ஏற்படும்.

கோபம், பதற்றம் போக்கும் மலர் மருந்துகள்!

மிட்டாய்:
இப்படி குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினருக்கும் மிக எளிதாக இந்த மருந்தைக் கொடுக்கலாம். சாதாரண சீனி மிட்டாயைச் (சர்க்கரை) சாப்பிடுவதுபோல இந்த மலர் மருந்தைச் சாப்பிடலாம். நாக்கில் போட்டால் தானாகக் கரையும் இந்த மருந்து சாப்பிடுவதற்கு எளிதானது மட்டுமல்ல, மிக எளிதாக நோய்களைப் போக்கக்கூடியது. பக்கவிளைவு என்ற பேச்சுக்கே இடமில்லை.ஆகவே அனைவரும் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு கூறிய அவர் என்னென்ன பிரச்சினைகளுக்கு இந்த மருந்துகளைக் கொடுக்கலாம் என்பதுபற்றி வாய்ப்பு வரும்போது எழுதுவார், படித்துப் பயன்பெறலாம்.