பாவ விமோசனத்துக்கு கருடசேவை!

 

பாவ விமோசனத்துக்கு கருடசேவை!

மும்மூர்த்திகளில் காக்கும் கடவுள் என்று போற்றப்படும் மகாவிஷ்ணுக்கு உகந்த நாளான இன்று அவருடைய வாகனமாக இருக்கும் கருடாழ்வாரை தரிசித்து மறுபிறவி கிடையா வரமும் பாவ விமோசனத்தையும் பெறலாம்.
கருடபகவான் வினதையின் மகன் ஆவார். கருடன் மீது பெருமாள் உலாவருவது கருட சேவையாகும். வானத்தில் வட்டமிடும் கருடனை கண்டு தரிசிப்பவர்களுக்கு, அவர்களை பிடித்த தோஷங்கள் அனைத்தும் அகலுவதோடு, மறுபிறவி கிடையாது என்பர். நாகத்திற்கு எதிரி கருடன். சர்ப்பதோஷம் உள்ளவர்கள் கருட சேவை காண்பது நல்லது. கருடன் கடைசி நேரத்தில் திருமாலின் திருத்தோளில் தரிசித்ததால் மோட்சம் பெற்றார். கருடனின் ஆற்றல், பக்தி இவற்றைக் கண்ட திருமால் அந்தக் கருடனை தன் முக்கிய வாகனமாக ஏற்றார். அதனால் கருடன் ‘பெரிய திருவடி’ என்றும் புகழப்படுகிறார்.

பாவ விமோசனத்துக்கு கருடசேவை!

மற்ற தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு இருப்பதுபோல் கருட பகவானுக்கும் சிறப்பு வழிபாடுகள் உண்டு. ஏழரைச் சனி, அஷ்டமச் சனி போன்ற பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ள கருட பகவானின் விரத வழிபாடு நமக்கு கைகொடுக்கிறது. நவகிரகங்களினால் ஏற்படும் அனைத்து விதமான தோஷங்களையும் விலக்குபவராகவும் கருடன் திகழ்கிறார்.

கருடன் திசை!

வானத்தில் வட்டமிடும் கருடனை நாம் அனைத்து நேரங்களிலும் காண இயலாது. எனவே வைணவத் தலங்களில் அருளும் கருடாழ்வாரை வணங்கி, அவருக்கு துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்யலாம். நாம் வெளியில் செல்லும்போது கருட பகவான் வலமிருந்து இடம் போனால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. இடமிருந்து வலம் போனால் வருத்தம் உண்டாகும். கருடன் வட்டமிடுவது நலத்தையும், நன்மைகளையும் கொடுக்கும். கருடன் இரையை கவ்வியபடி வலமிருந்து இடம் போனால் ஆதாயம், வெற்றி உண்டாகும். அத்துடன் பகைகள் அழியும். கருடனை நாம் எந்தத் திசையில் காண்கிறோமோ அந்தத் திசையில் இருந்து லாபம் ஏற்படும்.

பாவ விமோசனத்துக்கு கருடசேவை!

பித்ரு தோஷம் போக…!

புண்ணியமாதமான புரட்டாசியில் பெருமாள் கோயில்களில் பிரம்மோற்ஸவம் நடைபெறும். அதிலும் திருப்பதி பிரம்மோற்ஸவம் மிகப் பிரசித்திப் பெற்றது. வாழ்வில் ஒருமுறையேனும் அந்த வைபவத்தைத் தரிசிப்பதை பெரும் கொடுப்பினையாகச் சொல்வார்கள் நம் பெரியவர்கள். அந்த வைபவத்தில் மற்ற சேவைகளைத் தரிசிக்காவிட்டாலும், கருடசேவையை மட்டுமாவது அவசியம் தரிசிக்கவேண்டும்.

பாவ விமோசனத்துக்கு கருடசேவை!

செய்த பாவத்தின் காரணமாக நரகத்தில் உழலும் ஆத்மாக்கள், மோட்சப் பிராப்தி இருந்தும், ஊழ்வினை காரணமாக மோட்சத்தை எட்ட இயலாத ஆத்மாக்கள், கருட சேவையைத் தரிசிக்க திரள்வார்கள் என்கின்றன புராணங்கள். அந்த ஒருநாள் மட்டும், அவர்கள் தங்களின் துயரத் தளைகளில் இருந்து விடுபடுவதற்கான அனுமதியை பெருமாளிடம் கருட பகவானே கேட்டுப் பெற்றாராம். அதேபோல், அன்று பெருமாளைத் தரிசிக்க வரும் பூலோக

பாவ விமோசனத்துக்கு கருடசேவை!

மக்களுக்கும் திருவருள் புரியும்படி வரம் கேட்டு வாங்கினாராம் கருடன். அப்படி, கருடசேவையைத் தரிசிக்க வரும் பித்ருக்கள், தங்களின் சந்ததியினர் வந்திருக்கிறார்களா என்று தேடுவர். அவர்களை தியானிப்பதுடன், அவர்களின் விமோசனத்துக்காகவும் சுவாமியிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்’ என்பது ஐதீகம்.இன்றைக்கும், கருடசேவையைத் தரிசித்த கையோடு சிறிது நேரம் வானத்தை உற்று நோக்கி தியானிக்கும் வழக்கம், பக்தர்கள் சிலரிடம் உண்டு. இதனால் சுவாமியின் திருவருளோடு, தங்கள் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

பித்ரு தோஷம் உள்ளவர்கள் கருட சேவையைத் தரிசித்து வந்தால், அந்த தோஷம் நீங்கும். சந்ததி செழிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும். வேங்கடவனுக்கு உகந்த புரட்டாசியில், திருப்பதிக்குச் சென்று பிரம்மோற்ஸவத்தில் கலந்துகொள்வதுடன், கருடசேவையையும் தரிசித்து அருள்பெறுங்கள்!

-வித்யா ராஜா