குப்பையில் கிடந்த பணம், நகைகள்… சேமித்து வைத்த மூதாட்டிகள்!- உதவி கரம் நீட்டிய சென்னை போலீஸ்

 

குப்பையில் கிடந்த பணம், நகைகள்… சேமித்து வைத்த மூதாட்டிகள்!- உதவி கரம் நீட்டிய சென்னை போலீஸ்

சொந்த வீட்டில் குப்பைகளோடு நகை, பணத்தை சேமித்து வைத்துவிட்டு பிளாட்பாரத்தில் வாழ்ந்த மூதாட்டிகளுக்கு சென்னை காவல்துறையினர் உதவி செய்ததோடு, சொந்த வீட்டில் வாழ வைத்துள்ளனர்.

சென்னை, ஓட்டேரி சத்யவாணி முத்துநகரில் மூன்று மாடிகள் கொண்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு இருக்கிறது. பி பிளாக்கில் உள்ள கீழ்தளத்தில் எண் 34 என்ற வீடு பல ஆண்டுகளாகப் பூட்டியே கிடந்துள்ளது. அந்த வீட்டிற்குள் பாம்புகள் குடித்தனம் நடத்தி வந்துள்ளது. இந்த வீட்டின் ஓனர்களான மகேஷ்வரி (57), விஜயலட்சுமி (61), ராஜேஸ்வரி (65) ஆகியோர் பிளாட்பாரத்தில் வசித்து வந்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் மூதாட்டி மகேஷ்வரி அங்கேயே உயிரிழந்தார். அவரது உடலை யாரும் அடக்கம் செய்ய முன்வராத நிலையில், தலைமைச் செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, மாநகராட்சி ஊழியர்களோடு மகேஷ்வரியின் சடலத்தை ஓட்டேரியில் மயானத்தில் அடக்கம் செய்தார்.

இதைத் தொடர்ந்து ராஜேஸ்வரி, விஜயலட்சுமியிடம் உதவி வேண்டுமா என்று இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி கேட்டுள்ளார். அப்போது அவர்கள், எங்களுக்கு வீடு இருக்கிறது என்றும் அந்த வீட்டின் பூட்டை திறக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து, காவல்துறையினருடன் வீட்டிற்கு சென்ற இன்ஸ்பெக்டர், வீட்டின் பூட்டை உடைத்தனர். வீடு முழுவதும் குப்பைகள் இருந்ததால் தூர்நாற்றம் வீசியதோடு, பாம்பு, பூரான் போன்ற உயிரினங்கள் இருந்தன. இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்களுடன் வீட்டில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டது. அப்போது, குப்பைகளில் சில்லறைக் காசுகள் இருப்பது தெரிந்தது. இதனிடையே, வீட்டுக்குள் தங்க நகைகள், பணம், வெள்ளி இருப்பதாக மூதாட்டிகள் கூறியுள்ளனர்.

பின்னர் குப்பைகளை ஊழியர்கள் கவனமாக அகற்றினர். அப்போது, குப்பைகளுடன் நகைகள் இருந்ததோடு, செல்லாத 500, 1,000 பணத்துடன் 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளும் சிதறிக்கிடந்தன. இவற்றை கைப்பற்றிய காவல்துறையினர், பணத்தை எண்ணினர். அதில், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தது. செல்லாத பணம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தது. வீட்டில் இருந்த மூக்குத்தி, செயின், கம்மல், மோதிரம் ஆகியவற்றை நகைக்கடைக்கு எடுத்து சென்ற காவல்துறையினர், அவற்றை பரிசோதித்து பார்த்தனர். அப்போது, அவை அனைத்தும் தங்க நகைகள் என்றும் 7 பவுன் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, வீட்டை சுத்தம் செய்த காவல்துறையினர், பெயின்ட் அடித்துக் கொடுத்தனர். தற்போது மூதாட்டிகள் 2 பேரும் அந்த வீட்டில் குடியிருந்து வருகின்றனர். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று காவல்துறையினர் அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். அந்த வீட்டில் இருந்து மூன்று டன் குப்பைகளை எடுத்துள்ளனர் மாநகராட்சி ஊழியர்கள்.