மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் போலியான சான்றிதழ் கொடுத்த மாணவி மற்றும் அவரது தந்தை மீது பெரியமேடு போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பட்டியலின மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த தீக்ஷா என்ற மாணவியின் அழைப்பு கடிதம் மற்றும் ரேங்க் லிஸ்ட்டை சரிபார்த்தபோது போலியானது என தெரியவந்தது. நீட் தேர்வில் வெறும் 27 மதிப்பெண்களே பெற்றிருந்த மாணவி 610 மதிப்பெண் பெற்றிருந்ததாக போலி சான்றிதழ் கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மாணவி தீக்க்ஷா மற்றும் அவரது தந்தையும் பல் மருத்துவருமான பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீது மோசடியான ஆவணங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.