கந்துவட்டி கொடுமையால் நாட்டுப்புற கலைஞர் தற்கொலை… தூத்துக்குடி அருகே சோகம்!

 

கந்துவட்டி கொடுமையால் நாட்டுப்புற கலைஞர் தற்கொலை… தூத்துக்குடி அருகே சோகம்!

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே கந்துவட்டி கொடுமையால் நாட்டுப்புற கலைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி அடுத்த தட்டாப்பாறை அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரம்மராஜன் (60). நாட்டுப்புற கலைஞரான இவர், தமிழன்டா என்ற அமைப்பின் மாநில பொருளாளராக உள்ளார். இந்த நிலையில், பிரம்மராஜன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் கீழகோட்டைதெருவை சேரந்த சிவசிதம்பரம், அருணாச்சலம், பார்த்திபன் ஆகியோரிடம் ரூ.3.5 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்கு ரூ.10 லட்சம் வட்டியாக மட்டுமே செலுத்தியதாக கூறப்படுகிறது.

கந்துவட்டி கொடுமையால் நாட்டுப்புற கலைஞர் தற்கொலை… தூத்துக்குடி அருகே சோகம்!

இந்த நிலையில், கொரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், பிரம்மராஜனால் கடந்த சில மாதங்களாக வட்டி செலுத்த முடியவில்லை. இதனால், கடன் கொடுத்தவர்கள் கந்துவட்டி கேட்டு தொல்லை அளித்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பிரம்மராஜன், நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை, தட்டபாறை போலீசார் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரம்மராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி கிராமிய காவல் நிலைய போலீசார், வழக்குப் பதிந்து அருணாச்சலத்தை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சிவசிதம்பரம், பார்த்திபன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். கந்துவட்டிக் கொடுமையால் நாட்டுப்புற கலைஞர் தற்கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.