கடவுளுக்கு ஆகாத தீட்டுக்கள்!

 

கடவுளுக்கு ஆகாத தீட்டுக்கள்!

மாதவிலக்கு, குழந்தை பிறப்பு, இறப்பு போன்றவை மிக மோசமான தீட்டு, இந்த நாட்களில் இறை வழிபாடு கூடாது என்ற கருத்து அனைவர் மத்தியிலும் உள்ளது. தீட்டுடன் கடவுளை வழிபட்டால் கடவுள் நம்மை ஏற்கமாட்டார். பாவம் வந்து சேரும். கடவுளின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்ற எண்ணமும் உள்ளது.

உண்மையில் இது எல்லாம் தீட்டே இல்லை, காமம், கோபம், சுயநலம், ஆணவம், பொறாமை ஆகிய ஐந்துதான் கடவுளுக்கு ஆகாத தீட்டு என்று ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கடவுளுக்கு ஆகாத தீட்டுக்கள்!

மாதவிலக்கு என்பது இயற்கை நிகழ்வு. இந்த நேரத்தில் பெண்களின் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும். கோவிலுக்கு சென்று கர்ப்ப கிரகத்தின் அருகே நிற்கும்போது, கர்ப்ப கிரக வெப்பம் தாக்கி பெண்களுக்கு மாதவிலக்கின் வலி, உதிரப்போக்கு அதிகரித்துவிடும் என்பதாலேயே கோவிலுக்கு வர வேண்டாம் என்று நம் முன்னோர்கள் கூறினர். அதே நேரத்தில் வீட்டில் இருந்தபடி வழிபடுவதில் எந்த தடையும் இல்லை என்கின்றனர்.

இதே போல் குழந்தை பிறந்தால் தீட்டு என்று சொல்வார்கள். குழந்தை பிறந்த தீட்டைக் கழித்த பிறகுதான் அந்த குடும்பத்தினர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது. குழந்தை என்பது கடவுள் கொடுத்த வரம். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பது முன்னோர் வாக்கு. அப்படி இருக்கும்போது குழந்தை பிறந்ததால் தீட்டு வந்தது என்பது உண்மை இல்லை என்கின்றனர்.

பெண் மீதும் பொருள் மீதும் வைக்கும் ஆசை அந்த பொருளின் நினைவாகவே நம்மை இருக்கச் செய்துவிடும். இந்த காம ஆசை கடவுளுக்கு ஆகாத தீட்டாக மாறிவிடுகிறது.

ஆசை போலவே கோபமும் ஒருவித வெறியை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. கோபத்துடன் செயல்படும் காரியம் எதுவும் வெற்றி பெறுவது இல்லை. கோபத்தால் அழிந்தவர்கள் கோடிக்கணக்கானோர். கோபம் உள்ள மனதில் கடவுள் குடியிருக்க முடியாது. அது கடவுளிடமிருந்து மனிதனை பிரிக்கும் பெரிய தீட்டாக மாறிவிடுகிறது.

சுயநலத்துடன் வாழும் ஒருவர் மற்றவர்களுக்கு உதவ முடியாது. இவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே யோசிப்பார்கள். அப்படி இருக்கும்போது கடவுளை நினைக்க இவர்களுக்கு நேரம் இருக்காது. தான் மட்டும்தான் வாழ வேண்டும் என்று மற்றவர்களின் உடைமைகளை அபகரித்துக்கொள்ளத் தயங்கமாட்டார்கள், அல்லது அடுத்தவர்களுக்கு கிடைக்கக் கூடாது என்று காரியங்களில் இறங்கிவிடுவாரக்ள். இதுவும் கடவுளுக்கு ஆகாத தீட்டாகும்.

ஆணவம், கர்வம் இருக்கும் மனம் மற்றவர்களை மதிக்காது. உடலால், மனதால் மற்றவர்களை காயப்படுத்திக்கொண்டே இருக்கும். அதே போல் மற்றவர்கள் வாழ்வதை, மற்றவர்களுக்கு நல்லது நடந்ததை ஏற்க முடியாது, மற்றவர்களுக்கு கெடுதல் நடக்கவே விரும்புவார்கள் பொறாமை கொண்டவர்கள். இத்தகைய எண்ணம் கடவுளுக்கு பிடிக்காத, தீட்டாக மாறிவிடுகிறது!